திருட்டுக்கதை மன்னன் என்று இணையதளங்களில் தொடர்ந்து ஓட்டப்படும் இயக்குநர் அட்லியின் அடுத்த பட ஹீரோ யார் என்று தெரிந்தால் சிலருக்கு மைல்ட் ஹார்ட் அட்டாக்கே வரக்கூடும். சினிமாவில் என்ன நடந்தாலும் சகித்துக்கொள்ளத்தான் வேண்டும் என்கிற அடிப்படையில் இச்செய்தியையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அட்லி அடுத்து இயக்கவிருப்பது இந்தி சினிமாவின் ராஜா ஷாருக் கான் படத்தை.

முதல் படமான ‘ராஜா ராணி’தொடங்கி ‘தெறி’,’மெர்சல்’ தற்போது இயக்கி முடித்திருக்கும் ’பிகில்’ படம் வரை  எதுவுமே அட்லியின் சொந்தக் கதைகள் அல்ல என்கிற சர்ச்சை எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. ஆனாலும் அட்லியின் சாமர்த்தியம் என்பது அவர் ஒரே படத்துக்கதைகளை திருடுவதில்லை. ஒரு படத்திலிருந்து ரெண்டு மூன்று சீன்களை எடுத்துவிட்டு அடுத்த படத்துக்குத் தாவி விடுவார். அதனால் சிலர்,..நிறைய படங்களை தனித்தனியா பாத்து நேரத்தை வீணடிக்கிறதை விட அட்லி படத்தைப் பாத்தா ஒரே படத்துல பத்துப்படம் பாத்த மாதிரி இருக்கும் என்று கிண்டலடிப்பதுண்டு.

இந்நிலையில் அவரைத் தூற்றுவோர் தூற்றட்டும் எப்படிப்பார்த்தாலும்  கடைசியில் ஹிட் படமாகக் கொடுத்துவிடுகிறாரே என்று நினைத்தோ என்னவோ தனது அடுத்த தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் நடிக்கத் தயாராகிவிட்டார் ஷாருக் கான். ஒரே நேரத்தில் இந்தி,தெலுங்கு, தமிழில் தயாராகவிருக்கும் இப்படத்துக்கு அட்லி வாங்கவிருக்கும் சம்பளம் ரூ.30 கோடிகளாம். கடைசியாக ‘ஸீரோ’படம் மூலம் சூப்பர் ஃப்ளாப் கொடுத்த ஷாருக் அடுத்து எந்த புதிய படத்திலும் ஒப்பந்தமாகாமல் அட்லிக்காக காத்திருக்கிறாராம். இப்போதைக்கு ஒரு கருப்புத்தமிழன் இந்திப்படத்தை இயக்குகிறார் என்று ஒரு அல்ப சந்தோஷம் அடைந்துகொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.