’இந்தியன் 2’பிரச்சினை ஒரு வழியாக முடிவுக்கு வந்ததைப் போல இயக்குநர் ஷங்கருக்கும் நடிகர் வடிவேலுவுக்கும் இடையில் இருந்த கருத்து வேறுபாடுகளும் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அவர்கள் இருவரும் சமாதானமான செய்தி மிக விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

2006 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் 'இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி'.அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான 24 ஆம் புலிகேசி படத்தை இயக்குநர் சிம்புதேவன் கடந்த ஆண்டு தொடங்கினார்.முதல்பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்தையும் இயக்குநர் ஷங்கரே தயாரித்தார்.இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் நின்றுபோனது. வடிவேலு மற்றும் படக்குழுவினர் இடையே மோதல் காரணமாக படப்பிடிப்பு நின்றுபோனது.வடிவேலு ஒத்துழைப்புக் கொடுக்காததால் படப்பிடிப்பு நடத்த முடியாத நிலை, இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என இயக்குநர் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கம் நடிகர் வடிவேலுவிடம் இயக்குநர் ஷங்கர் அளித்த புகாரின் பேரில் விளக்கம் கேட்டது.வடிவேலு அந்தப்படத்தில் நடிக்கவில்லையெனில் கடும் நடவடிக்கை இருக்கும் என்று தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.இதற்கிடையே வடிவேலு அளித்த பேட்டியொன்றில் இயக்குநர் ஷங்கரைக் கடுமையாகத் திட்டி இருந்தார்.அதன்பின் வடிவேலு மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளும் நடந்தன்.இப்போது அவை அத்தனையும் முடிவுக்கு வந்துள்ளனவாம்.வடிவேலு ஷங்கர் ஆகிய இருவருக்குமான மோதல் முடித்து வைக்கப்பட்டிருக்கிறதாம்.

ஒரு பெரிய தயாரிப்பாளர் இருவருக்குமான சிக்கலைத் தீர்த்து வைத்துவிட்டாராம். அதன்படி, ’இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி’ படம் கைவிடப்படுகிறது என்று சொல்கிறார்கள்.இந்த முடிவை வடிவேலு, ஷங்கர் ஆகிய இருவருமே ஏற்றுக் கொண்டனராம்.எதனால் இந்த முடிவு? இதர்கு மாற்று என்ன? என்கிற கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்ல அடுத்தடுத்து புதிய அறிவிப்புகள் வரும் என்கிறார்கள். அந்த அறிவிப்பின் படி ஷங்கர் நிறுவனத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்ட வடிவேலு இரண்டு படங்கள் சம்பளம் வாங்காமல் நடித்துத் தரக்கூடும் என்கிறார்கள்.