தனது ‘சக் தே இந்தியா’படம் போலவே நண்பர்கள் அட்லி, விஜய்யின் படம் மாபெரும் வெற்றி அடையட்டும் என்று இந்தி சூப்பர் ஸ்டார் போட்ட பதிவை வைத்து வலைதளங்களில் பெரும் சர்ச்சை ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. தனது படத்தின் அப்பட்டமான காப்பிதான் பிகில் என்பதை சூசகமாக உணர்த்தி ஷாருக் கிண்டலடித்திருக்கிறார் என்கின்றனர் தளபதியின் எதிர்கோஷ்டி.

விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முன்னோட்டம் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு வெளியானது.ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் என்று நம்பப்படும்  பிகில் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

2 நிமிடம் 41 விநாடிகள் நீளம் கொண்ட இந்த முன்னோட்டத்தில் நடிகர் விஜய் பேசும் பஞ்ச் வசனங்களும், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளும்,நயன்தாரா வரும் காதல் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. வழக்கம்போலவே விஜய் ரசிகர்கள் ‘வாவ்’என்று வாய்பிளக்க, அவரது எதிர்கோஷ்டிகள் ட்ரெயிலரை பல வகையான மீம்ஸ்களை தயாரித்து அவற்றை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

இந்நிலையில்  இதுவரை இல்லாத புது வழக்கமாக ’பிகில்’ முன்னோட்டத்தை பார்த்த இந்தி நடிகர் ஷாருக்கான், “எனது நண்பர்கள் அட்லி, விஜய், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன். ’ஷக் தே இந்தியா படம் போலவே இப்படமும் உத்வேகமான வெற்றி பெறட்டும் என்று ட்விட் செய்துள்ளார்.

‘ஷக் தே இந்தியா’ படத்தில் ஷாருக்கான் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக நடித்திருப்பார்.பிகில் படத்தில் விஜய், மகளிர் கால்பந்து அணியின் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பிகில்’படத்தில் அதிகம் கிண்டலடிக்கப்பட்ட ‘கேக்கல,...கேக்கல...’காட்சி அப்படியே ‘சக் தே இண்டியாவிலும் இடம் பெற்றிருக்கும்.ஆகவே ஷாருக்கான் பிகில் படத்தை புகழ்வது போல ட்விட் செய்திருப்பது மறைமுகமாக அவர் கேலி செய்வதாகவே இருக்கிறது என்றே பலரும் நம்புகின்றனர். இதன்விளைவாக பிகில் படத்துடன்  ஷக் தே இந்தியாவை ஒப்பிட்ட  ஹேஷ்டேக் ஒன்று இந்திய அளவில் டிரெண்டாகி முதலிடம் பிடித்திருக்கிறது.