இந்தி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை ஷமா சிக்கந்தர், தான் 14 வயதில் பாலியல் தொந்தரவுக்குள்ளாக்கப்பட்டதாக பரபரப்புப் புகார் ஒன்றைக் கூறியுள்ளார். பல்வேறு துறைகளில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் குற்றங்களை துணிச்சலாகக் கூறுவதற்காக தொடங்கப்பட்ட இயக்கம் மீ டூ. இந்த இயக்கம் இந்தியாவில் தற்போது பிரபலம் அடைந்து வருகிறது. நமது பெயரும் இந்தப் பட்டியலில் வந்து விடுமோ என்று பிரபலங்கள் ஓடி ஒளியும் அளவுக்கு இதன் தாக்கம் இந்தியாவில் உள்ளது. நடிகைகள், பத்திரிக்கையாளர்கள் பலரும், தங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகளை தைரியமாக பகிர்ந்து வருகின்றனர். 

இந்த நிலையில் தற்போது மி டூ மூலம் புகார் கூறியுள்ளார் பிரபல நடிகை ஷமா ஷிக்கந்தர். யே மேரி லைஃப் ஹை, பால் வீர் போன்ற தொடர்களில் நடித்து பிரபலம் ஆனவர் தான் ஷமா ஷிக்கந்தர் இவர், தாம் 14 வயதில் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக பகீர் தகவலைக் கூறியுள்ளார். தம் மீது கை வைத்தவர் வேறு யாரும் அல்ல, ஒரு இயக்குனர் தான் என்றும் தெரிவித்துள்ளார். 14 வயதில் தாம் சினிமா தொழில் வாழ்வை தொடங்கிய போது இச்சம்பவம் நடைபெற்றதாக நடிகை நினைவு கூர்ந்துள்ளார். 

தாம் படப்பிடிப்பு தளத்தில் இருந்த போது இயக்குனர் ஒருவர் தொடையின் மீது கை வைத்ததாக கூறியுள்ளார் நடிகை ஷமா. அப்போது தாம் அதிர்ச்சி அடைந்து அவரது கையை தட்டி விட்டதாக தெரிவித்துள்ளார். அப்போது இயக்குனர் தம்மிடம் மிகவும் அருவருப்பான வகையில் பேசியதாக கூறியுள்ள நடிகை, தான் இல்லா விட்டாலும் ஒரு தயாரிப்பாளரோ, நடிகரோ உன்னை பயன்படுத்திக் கொள்வார் என்று தெரிவித்ததாகக் கூறியுள்ளார். 

இதெல்லாம் நடக்காமல் சினிமாவில் வளர்ச்சி பெற முடியாது என்றும் அந்த இயக்குனர் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார் நடிகை ஷமா ஷிக்கந்தர். அப்போது தமக்கு வயது 14 என்றும், கண்கள் நிறையக் கனவுகளுடன் சினிமா துறைக்கு வந்ததாகவும் ஷமா மனம் திறந்துள்ளார். நடிகர் அலோக் நாத் மீதான பாலியல் புகார் குறித்து கேட்ட போது, அதற்கு பதில் அளித்த நடிகை ஷமா, அலோக் நாத் மீதான புகாரால் தாம் அதிர்ச்சி அடைந்து விட்டதாகத் தெரிவித்தார். அவருடன் சேர்ந்து பணியாற்றியதில்லை என்று கூறிய ஷமா, இப்படி ஒரு நிகழ்வைக் கேள்விப்படுகையில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்ததாக தெரிவித்தார்.