பிரபல தொலைக்காட்சி நடிகை ஸ்ரீலட்சுமி கனகலா, கடந்த சில வருடங்களாகவே புற்று நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது திடீர் என மரணமடைந்து விட்டதாக, அவருடைய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில்,  கணவர் பெடி ராம ராவ் மற்றும் மகள்கள் ராகலீனா மற்றும் பிரேர்னா ஆகியோருடன் ஸ்ரீலட்சுமி கனகலா வசித்து வந்தார். இவர், ராஜசேகர சரித்திரா, ருத்ர கீதம், சூப்பர் மாம், போன்ற பல சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர்.

ஸ்ரீலட்சுமியின் தந்தையும் புகழ்பெற்ற நடிகர்-நாடக ஆசிரியர் ஆவர்.  தேவதாஸ் கனகலா ஆகஸ்ட் 2019 மாதம் மரணமடைந்த நிலையில், அவருடைய மகள் ஸ்ரீலட்சுமி கனகலா மரணம் அவர்களுடைய குடும்பத்தை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவருடைய  சகோதரர் ராஜீவ் கனகலா மற்றும் சுமா கனகலா ஆகியோரும் தெலுங்கு, கன்னட மற்றும் தமிழ் திரைப்பட துறையில் பிரபலமான நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களாக உள்ளனர்.

இந்நிலையில் இவருடைய மரண அறிவிப்பை வெளியிட்ட, அவர்களுடைய குடும்ப செய்தி தொடர்பாளர், கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீலட்சுமியின் ரசிகர்கள், மற்றும் பிரபலங்கள் யாரும் வீட்டிற்கு வர வேண்டாம் என தெரிவித்துள்ளார். இவரின் மரண செய்தியை அறிந்த பலர் தொடர்ந்து சமூக வலைத்தளம் மூலம் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.