அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட தனது கணவரை தன்னிடம் காட்டாமல் போலீஸ் வைத்திருப்பதாகவும், தனது வீடு புகுந்து பணம் மற்றும் ஆவணங்களை திருடி சென்று விட்டதாகவும் சின்னத்திரை நடிகை ரோஜா ஸ்ரீ குற்றம் சாட்டியுள்ளார்.

சின்னத்திரை நடிகை ரோஜா ஸ்ரீ 

நடந்த சம்பவம் குறித்து நடிகை ரோஜா ஸ்ரீ கூறியதாவது, “எனது கணவர் கணேஷ் குமார் மற்றும் அவரது நண்பர் தூண்டில் ராஜா இருவரும் சென்னையில் ஒரு கிளப்-க்கு சென்றுள்ளனர். அங்கு ஓய்வு பெற்ற ஏடிஜிபி மகன் செல்வபாரதி என்பவருக்கும், ராஜாவுக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. செல்வபாரதி ராஜாவை கண்மூடித்தனமாக அடித்துள்ளார். பாட்டிலைக் கொண்டு ராஜாவை செல்வபாரதி அடித்ததன் காரணமாக கையில் நரம்புகள் பாதிக்கப்பட்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் அளவிற்கு போய்விட்டது.

கணவருக்கு சம்மந்தமில்லை

அப்போது கூட ராஜாவை விடாமல் செல்வபாரதி முகத்தில் தாக்கியுள்ளார். முகத்தில் தையல் போடும் அளவிற்கு காயம் உள்ளது. இந்த தாக்குதல் விவகாரம் குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. செல்வபாரதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஓய்வு பெற்ற ஏடிஜிபியின் மகன் என்பதால் இந்த வழக்கு மேம்போக்காக நடந்து வருகிறது. இந்த தகராறின் போது எனது கணவர் அந்த இடத்தில் இருந்தார் மற்றும் இவர்களது சண்டையை விலக்கினார்.

வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர்

அவருக்கும் இந்த சண்டைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. இந்த நிலையில் எனது கணவரை கைது செய்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் நான் இங்கு வந்து பார்த்தபோது காவல் நிலையத்தில் எனது கணவர் இல்லை. என் கணவரை என் கண்ணில் காட்டவே இல்லை. மேலும் போலீசார் என் வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டு என் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர்.

பணம் மற்றும் ஆவணங்கள் திருட்டு

எனது வீட்டில் இருந்து நான்கு முக்கிய ஆவணங்களையும் ரூ.1.5 லட்சம் பணத்தையும் போலீசார் எடுத்துச் சென்றுள்ளனர். தற்போது நடப்பது அடிதடி வழக்கு. அதற்கும் என் வீட்டில் இருந்து ஆவணங்களை எடுப்பதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? என் வீட்டில் இருக்கும் ஆவணங்களை வைத்து என் கணவர் மீது வேறு ஏதாவது வழக்கு போட முடியுமா என முயற்சிக்கிறார்கள். என் கணவர் கணேஷ்குமார் இன்டீரியர் டிசைன் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷனில் இருக்கிறார். யாருக்காவது பணத்தை கடனாக கொடுப்பார். எங்களுக்கு பெரிய பின்புறம் எதுவும் இல்லை.

கணவரை கண்ணில் காட்டவில்லை - ரோஜா ஸ்ரீ கண்ணீர்

என் கணவருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லை. ஆனால் அவரை என் கண்ணில் காட்டாமல் போலீசார் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். என் கணவரின் நண்பர் அதிமுகவில் இருப்பதால் அவரையும் சித்திரவதை செய்கின்றனர். என் கணவரை காப்பாற்றிக் கொடுங்கள்” என நடிகை ரோஜா ஸ்ரீ கண்ணீருடன் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் தனது வீட்டை சோதனை என்கிற பெயரில் போலீஸார் எப்படி எல்லாம் அலங்கோலப்படுத்தி இருக்கிறார்கள் என்ற வீடியோவையும் காட்டினார்.

ரோஜா ஸ்ரீ மீது போலீஸார் வழக்குப் பதிவு

இந்த நிலையில் நடிகை ரோஜா ஸ்ரீ மீது அவதூறு பரப்புதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.