சீரியல் நடிகை கண்மணி மனோகரன் தனக்கு குழந்தை பிறந்திருக்கும் செய்தியை புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்திருக்கிறார்.
வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை நடிகர்களுக்கும் ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றனர். சின்னத்திரை நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அறிந்து கொள்வதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக நடிகர்களின் instagram பக்கங்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. நடிகர், நடிகைகளும் தங்கள் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் ரசிகர்களுடன் சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலமாக பகிர்ந்து கொள்கின்றனர்.
அந்த வகையில் பிரபல சீரியல் நடிகை கண்மணி தனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கும் செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ என்கிற சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமானவர் நடிகை கண்மணி மனோகரன். இந்த சீரியலுக்கு பின்னர் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாததால் அவர் சீரியலில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘அமுதாவும் அன்னலட்சுமி’ என்கிற தொடரில் கதாநாயகியாக நடித்து வந்தார்.
அந்தத் தொடர் முடிவடைந்த நிலையில் மீண்டும் விஜய் டிவியில் ‘மகாநதி’ சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த சீரியலில் இருந்தும் பாதையிலேயே வெளியேறிய அவர், சில காலமாக எந்த தொடரிலும் நடிக்காமல் இருந்து வந்தார். இதற்கிடையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் அஸ்வத்தை காதலிப்பதாக அறிவித்தார். கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் கண்மணி. அவரின் வளைகாப்பு புகைப்படங்கள் மற்றும் கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
இந்த நிலையில் அவருக்கு ஜூன் 8 ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். “நாங்கள் ஒரு காதல் கதையை எழுதினோம். ஆனால் வாழ்க்கை அதனோடு தொடர்ச்சியான ஒரு விஷயத்துடன் எங்களை ஆச்சரியப்படுத்தியது. எங்களது பயணம் சிறிய திருப்பத்துடன் தொடர்கிறது” என அந்த பதிவில் கூறியுள்ளார். திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் கண்மணி அஸ்வத் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
