உலக நாடுகளை தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக இந்திய மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா, எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள, பெரியவர்கள், சிறுவர்கள் என பலரை விரைவில் பதம் பார்த்து வருகிறது. டெல்லியிலும் இதன் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் பல பாலிவுட் சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை தீபிகா சிங், தன்னுடைய தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் மருத்துவமனை தரப்பில் இருந்து அதற்கான பரிசோதனை முடிவுகளை கொடுக்க மறுப்பதாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வீடியோ ஒன்றை டாக் செய்து உதவி கோரியுள்ளார்.

இவர் டெல்லியின் தன்னுடைய கணவர், மகன், உள்ளிட்ட 45 பேர் கொண்ட கூட்டு குடும்பத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தீபிகாவின் தாயாருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்படவே, அவரை டெல்லி லேடி ஹார்திங்கோ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு பரிசோதனை செய்த போது, கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த பரிசோதனைக்காக முடிவை கேட்டால், கொடுக்க மறுப்பதாகவும், அவர்கள் அதை கொடுத்தால் மட்டுமே தன்னுடைய அம்மாவை மற்றொரு மருத்துவமனையில் அனுமதிக்க முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய பாட்டியின் உடல் நிலையும் மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவரையும் டெல்லியில் உள்ள ஒரு நர்சிங் ஹோம்மில் சேர்த்து சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

தன்னுடைய குடும்பத்தில் 45 பேர் இருக்கும் பட்சத்தில் தன்னுடைய அம்மாவை வீட்டில் தனிமை படுத்துதல் என்பது முடியாத காரியம் என்றும், பலருக்கு கொரோனா தொற்ற வாய்ப்புள்ளதாகவும், எனவே இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தன்னுடைய வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.