பெரிதும் நேசித்த காதலியைப் பறிகொடுக்கும்போது ‘எங்கிருந்தாலும் வாழ்க’ பாடுவார்களே அப்படி ஒரு தொனியில் ‘என் செங்கோல் கதையை விஜய் ரசிகர்களுக்கு தீபாவளிப் பரிசாக வழங்குகிறேன்’ என்கிறார் வருண் ராஜேந்திரன் நக்கலாக. 

இன்று கோர்ட்டில் ‘சர்கார்’ பஞ்சாயத்து முடிவுக்கு வந்த நிலையில் முதல் முறையாக பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பேசிய வருண் ராஜேந்திரன், துவக்கத்திலிருந்தே என் கதையை அங்கீகரிக்கச்சொல்லி போராடி வருகிறேனே ஒழிய படத்தை ரிலீஸ் ஆகவிடாமல் தடுக்கும் எந்தக்காரியத்திலும் ஈடுபடவில்லை. அதே போல் பணபேரம் எதிலும் ஈடுபடவில்லை. 

சற்று தாமதமாகவாவது முருகதாஸ் என்னை அங்கீகரித்ததற்கு மகிழ்ச்சி.  சர்கார் என்கிற பெயரில் வரும், என் செங்கோல் கதையை விஜய்க்கும், விஜய் குடும்பத்தினருக்கும், விஜய் ரசிகர்களுக்கும் தீபாவளிப் பரிசாக மனமுவந்து வழங்குகிறேன்’ என்கிறார். 

தற்காலிகமாக இந்த பிரச்சினை தீர்ந்திருப்பது போல தெரிந்தாலும் கோர்ட்டை விட்டு வெளியே வந்த பிறகு பாக்கியராஜ், முருகதாஸ், வருண் ராஜேந்திரன் தந்த பேட்டிகளை சற்று கவனமாக கேளுங்கள். மூவருக்குள்ளும் குமுறல் சத்தங்கள் மென்று முழுங்கப்பட்டு இன்னும் மிச்சமிருக்கின்றன.