நடிப்பில் பிசியாக இருக்கும் இயக்குனர் செல்வராகவன், நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த ஆயிரத்தில் ஒருவன் 2 மற்றும் புதுப்பேட்டை 2 போன்ற படங்களின் அப்டேட்டுகளை வெளியிட்டு உள்ளார்.

Selvaraghavan Reveals Update : தமிழ் சினிமாவில் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் இயக்குநர் செல்வராகவன். காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் போன்ற அவரது படங்கள் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. இவற்றில், தனுஷ் நடித்த 'புதுப்பேட்டை', கார்த்தி நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

செல்வராகவன் கொடுத்த அப்டேட்

இந்நிலையில், இந்த இரண்டு படங்களின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டை இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டுள்ளார். அதன்படி ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தின் ஸ்கிரிப்ட் எழுதும் பணி நடந்து வருவதாகவும், ‘புதுப்பேட்டை 2’ படத்தின் ஸ்கிரிப்ட் 50% முடிந்துவிட்டதாகவும் சமீபத்திய நேர்காணலில் இயக்குனர் செல்வராகவன் கூறியுள்ளார்.

"ஆயிரத்தில் ஒருவன் 2 ஸ்கிரிப்ட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை, எழுதிக்கொண்டிருக்கிறேன். அதேபோல், புதுப்பேட்டை 2 ஸ்கிரிப்ட் 50 சதவீதம் முடிந்துவிட்டது. இரண்டு படங்களின் கதையிலும் எனக்கு திருப்தி வரும் வரை எழுதுவேன். கார்த்தி மற்றும் தனுஷ் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பிஸியாக இருக்கிறார்கள். எல்லாம் சரியாக அமைந்தால் படம் தொடங்கும்," என்று செல்வராகவன் கூறினார்.

செல்வராகவனின் இந்த வார்த்தைகளை சினிமா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் பார்க்கின்றனர். இயக்கம் மட்டுமின்றி நடிப்பிலும் செல்வராகவன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கடைசியாக உன்னி சிவலிங்கம் இயக்கிய ஷேன் நிகம் நடித்த 'பல்டி' படத்தில் செல்வராகவன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்புக்கு சிறந்த வரவேற்பு கிடைத்தது. இதற்கிடையில், தனுஷ் நடித்த 'நானே வருவேன்' தான் செல்வராகவன் இயக்கிய கடைசிப் படம். இப்படம் 2022-ல் வெளியானது. இதையடுத்து மெண்டல் மனதில் மற்றும் 7ஜி ரெயின்போ காலனி 2 போன்ற படங்கள் அவர் இயக்கத்தில் தற்போது தயாராகி வருகிறது.