இனிமேல் படம் இயக்குகிற, நடிக்கிற வேலைகளுக்கு மத்தியில் படத்தின் நிலவரம் குறித்து தொடர்ந்து அப்டேட் பண்ணாவிட்டால் ரசிகர்கள் ஆள்வைத்து அடிப்பார்கள் போலிருக்கிறது. குறிப்பாக ரஜினி, அஜீத், சூர்யா படங்களின் அப்டேட் பஞ்சாயத்துகள் அடிக்கடி வர ஆரம்பித்திருக்கின்றன.

ஏற்கனவே இவ்வகையான பஞ்சாயத்தில் அஜீத்தின் ‘விஸ்வாசம்’பட டைரக்டர் சிக்கிச் சீரழிந்து வரும் நிலையில் சூர்யாவை வைத்து ’என்.ஜி.கே’ படத்தை இயக்கிவரும் செல்வராகவனும் ரசிகர்களின் ட்விட்டுகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிவருகிறார்.

’உன் தம்பி தனுஷை ரொம்ப நாள் வச்சி செய்யுறமாதிரி சூர்யா படத்தையும் லேட் பண்ணாதீங்க மிஸ்டர் சோம்பேறி செல்வா’ என்று கடுமையான விமர்சனங்களும் புறப்பட்டு வர ஆரம்பித்திருக்கும் நிலையில் மிகவும் நொந்துவிட்டார் செல்வராகவன்.

இது தொடர்பாக இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “என் மனமார்ந்த வேண்டுகோள். நாங்கள் அமைதியாக, கடுமையாக உழைத்து வருகிறோம். அப்டேட்டுகள் சரியான நேரத்தில் வரும். மூன்று நாளைக்கு ஒரு முறையோ, வாரா வாரமோ வராது.. எங்களுக்கு நீங்கள் பக்க பலமாக இருந்தால் எங்கள் இலக்கை நோக்கி இன்னும் கடுமையாக உழைக்கும் பலம் எங்களுக்குக் கிடைக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

2017 நவம்பரில் தொடங்கப்பட்ட இப்படம் செல்வராகவனுக்கு அவ்வப்போது உடல்நலம் சரியில்லாததால் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. அதனால் இப்போதைக்கு ’ என்.ஜி.கே’ எப்போதைக்கு வரும் என்று சொல்லமுடியாமல் தவிக்கிறார் செல்வா.