செங்கல்பட்டில் உள்ள பிரபல திரையரங்கம் ஜி.கே. சினிமாஸ். ரஜினி, விஜய், அஜித், சூர்யா என முக்கிய நடிகர்கள் அனைவரது திரைப்படங்களும் இந்த திரையரங்கில் தான் வெளியாகும். தமிழ்நாட்டில் லாபகரமாக செயல்படும் ஒரு சில திரையரங்குகளில் ஜி.கே.சினிமாசும் ஒன்று. சர்கார் திரைப்படம் வெளியாகி இதுவரை 250 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

ஆனால் சர்கார் படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள் நஷ்டம் அடைந்துள்ளதாக ஜி.கே.சினிமாஸ் உரிமையாளர் கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் சர்கார் படத்தின் செங்கல்பட்டு ஏரியா உரிமையை மட்டும் விநியோகஸ்தர் ஒருவர், 18 கோடி ரூபாய்க்கு வாங்கியதாகவும் ஆனால் தற்போது வரை பத்து கோடி ரூபாய் மட்டுமே வசூல் ஆகியுள்ளதாக கூறியுள்ளார்.

இந்த பத்து கோடி ரூபாய் வசூலில் ஜி.எஸ்.டி கழித்துவிட்டு திரையரங்க உரிமையாளர்களுக்கான பங்கையும் எடுத்துவிட்டால் விநியோகஸ்தருக்கு 6 கோடி ரூபாய் மட்டும் தான் கையில் இருக்கும் என்று கூறியுள்ளார். சர்கார் திரைப்படம் முதல் மூன்று நாட்கள் நல்ல வசூலை கொடுத்ததாகவும் அதன் பிறகு படத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இல்லை என்றும் ஜி.கே.சினிமாஸ் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் விஜய் படம் முதல் வாரம் மட்டுமே வசூலை கொடுக்கும் என்றும் அஜித், சிவகார்த்திகேயன் படங்கள் தான் சீராக வசூலை கொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். சர்கார் படத்தை விட சீமராஜா படத்தின் கலெக்சன் சீராக இருந்ததாக தெரிவித்துள்ள அவர் சர்காரை விட சீமராஜா தான் லாபகரமான படமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். பிரபல திரையரங்க உரிமையாளர் ஒருவர் விஜய் படத்தை விட சிவகார்த்திகேயன் படம் லாபம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.