தயாரிப்பாளர் சங்கம் போடுகிற ரெட் கார்டை சமீபகாலமாக யாரும் மதிப்பதாக தெரியவில்லை. அதற்கு பெரும் உதாரணம் வைகைப்புயல் வடிவேலு. 

இம்சை அரசன் 24 ம் புலிகேசி பட விவகாரத்தில் அப்படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் ஷங்கருக்கே தண்ணீர் காட்டினார் வைகைப்புயலான வடிவேலு. பஞ்சாயத்து முற்றி பேச்சு வார்த்தை வரை சென்றது. ஆனாலும் பேச்சு வார்த்தைக்கு வராத வடிவேலுக்கு சங்கம் ரெட் அலர்ட் கொடுத்தது. ஆனாலும், அவர் சட்டைசெய்யவில்லை. 

வடிவேலு மீதான ரெட் நடவடிக்கையை வெளியுலகம் அறிந்திருப்பதால் யாரும் அவர் இருக்கிற திசையைக் கூட எட்டிப் பார்க்கவில்லை. இத்தனை காலம் ஏதோ தானோவென்று இந்த விஷயத்தை மதித்து வந்த வைகைப்புயல் முதன் முறையாக சமாதானக் கொடியை பறக்க விட்டிருக்கிறார். இதற்கு ஒத்தாசை கேட்டு அவர் அணுகியது சினிமா பங்காளி சீமானை.

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மூலம் லைக்கா நிறுவனத்தை அணுகிய வடிவேலு, ‘அந்தப் படத்தில் நடிக்க சம்மதம். ஷுட்டிங் எப்ப வச்சுக்கலாம்?’ என்று கேட்டிருக்கிறார். ஆனால் படத்தின் முதல் பிரதி தயாரிப்பாளரான ஷங்கரை இன்னும் வடிவேலு சந்திக்கவில்லை. பேசவும் இல்லை. லைக்கா நிறுவனம் ஷங்கருடன் நெருக்கமாக இருப்பதை அறிந்தும் இப்படி நடந்து கொள்ளும் வடிவேலுவின் மமதையை நினைத்து மெச்சுகிறது தமிழ் திரையுலகம்!