நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இன்று 53வது பிறந்தநாள். இதனால் சமூக ஊடங்கங்கள் முழுவதும் அக்கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர். ட்விட்டரிலும் #HbdSeemanAnna என்கிற ஹாஸ்டக்கை அவரது தம்பிகள் பதிவிட்டு ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். கட்சியினர், திரை பிரபலங்கள் ஆகியோர் சீமானுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இதனிடையே சீமான் நடிப்பில் இன்று இரண்டு திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கத்தில், 'மிக மிக அவசரம்' திரைப்படம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பெண் காவலர் ஒருவரின் ஒருநாள் பொழுதை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் போலீஸ் உயரதிகாரியாக சீமான் நடித்திருக்கிறார். அதே போல விவசாயிகளின் வலியையும் வாழ்வாதாரத்தையும் சித்தரிக்கும் 'தவம்' படத்தில் பள்ளி ஆசிரியராக சீமான் நடித்துள்ளார்.

சீமான் நடித்திருக்கும் இரண்டு திரைப்படங்களும் அவரது பிறந்தநாளான இன்று வெளியாகி இருப்பதால் அவரது தம்பிகள் தாறுமாறாக கொண்டாடி வருகின்றனர்.இருபடங்களையும் இன்று ஒரே நாளில் காண இருப்பதாக அக்கட்சியினர் பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததை காணமுடிந்தது. இயக்குனராக தனது பயணத்தை தொடங்கிய சீமான் அவ்வப்போது படங்களில் நடித்து வந்தார். அரசியலுக்கு வந்த பிறகு அது முற்றிலும் குறைந்து போனது. இந்த நிலையில் அவர் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்திருப்பது அவரது தம்பிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.