கமலும் ரஜினியும் சினிமாவிலிருந்து விடைபெற்று அரசியலில் நுழைந்துகொண்டிருக்கும் நிலையில், முழுநேர அரசியல்வாதியாக இருந்த ‘செந்தமிழர்’ சீமான் மறுபடியும் சினிமாவுக்கு யு டர்ன் அடிக்கவிருப்பதாக சொல்கிறார்கள் அவரது தம்பிமார்கள்.

தனது குருநாதர் மணிவண்ணன் இயக்கத்தில் ‘அமைதிப்படை2’வில் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருந்த சீமான், அதன்பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கி முழுநேர அரசியலில் ஈடுபடத் துவங்கினார். சினிமாவில் தம்பிகள் சிலரின் இசை வெளியீட்டுன் விழாக்களில் ரணகளமாக சில கருத்துகளை தெறிக்கவிடுவதோடு அவரது சினிமா பங்களிப்பு ஓவர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் பதவிக்கான போட்டியில் இருப்பவர்களின் எண்ணிக்கை, ரஜினி,கமலையும் சேர்த்து ஒரு டஜனுக்கும் மேல் ஆகிவிட்டதை கருணையோடு நினைத்துப் பார்த்தார். அதில் ஒரு எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ளலாம் என்ற நல்ல எண்ணமோ அல்லது வேறு என்னமோ காரணத்துக்காக மீண்டும் சினிமாவில் நடிகராக, தயாரிப்பாளராக, இயக்குநராக முழுமூச்சாக களம் இறங்க முடிவெடுத்துள்ளார் சீமான்.

இதன் துவக்கமாக சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் ‘மிக மிக அவசரம்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து தன்னை வார்ம் அப் செய்துகொண்டவர், அடுத்த படியாக ஆர்.விஜயானந்த், ஏ.ஆர்.சூரியன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தவம்’ படத்தில் பள்ளி ஆசிரியராக இருந்துகொண்டு விவசாயத்தை காப்பாற்ற போராடும் வேடத்தில்  நடித்துள்ளார்.

இப்படத்தில் கதாநாயகனின் அப்பாவாக படத்தின் இரண்டாவது பாதியில் இரண்டாவது கதாநாயகன் என்று சொல்லுமளவுக்கு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சீமான் அடுத்து கதாநாயகனாக மட்டும் நடிக்க கதை கேட்டு வருகிறாராம்.