seeman against talking about rajinikanth and vairamuthu

ஆண்டாள் விவகாரம் தொடர்பாக வைரமுத்துவிற்கு ஆதரவாக ரஜினி கருத்து தெரிவித்திருக்க வேண்டும் என கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

"தமிழை ஆண்டாள்" என்ற கட்டுரையில் அமெரிக்க பல்கலைக்கழகம் கூறியதை மேற்கோள் காட்டி வைரமுத்து பேசியதுதான் இப்போது ஊடகங்கள் விவாதிக்கும் அளவுக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது. இதற்கு வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்பும் கூட இவருக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

அதிலும் குறிப்பாக வைரமுத்து எதிராக கடுமையான விமர்சங்களை முன்வைத்து வருகிறார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா. இழிவான சொற்களால் மிக கடுமையாக பேசி வருகிறார் எச்.ராஜா. இவரின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. எச்.ராஜாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் பஞ்சப் பராரியாக பரதேசம் தப்பி வந்தவன் நீ என்றும், எச்.ராஜாவால் இந்தியா துண்டாடப்படுமோ என்றும் அவரை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இன்று ஒரு பட விழாவில் கலந்து கொண்டு பேசிய பாரதிராஜா வைரமுத்துவை காரணம் காட்டி, தமிழகத்தில் கொல்லை புறமாக வர நினைத்தால் நிறைவேறாது. எங்களை குற்றப்பரம்பரை ஆக்கி விடாதீர்கள். எங்களுக்கு மதம் என்பது ஒருபோதும் கிடையாது என கடுமையாக சாடியிருந்தார்.

அதே பட விழாவில் கலந்து கொண்ட சீமான் ரஜினி மீது குற்றச்சாட்டை முன்வைத்தார். அப்போது பேசிய அவர், வைரமுத்து ரஜினியை நண்பராக பார்க்கிறார். ரஜினி அவரை எப்படி பார்க்கிறார் என்பது தற்போது நமக்கு தெரிகிறது. ஆண்டாள் விவகாரத்தில் ரஜினி இதுவரை வாய் திறந்து பேசவில்லை.
ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழல்லவா. உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன் என்று வைரமுத்து எழுதிய வரிகளின் மூலமாகவே ரஜினி வளர்ந்தார். அது வைரமுத்து அவருக்கு 
போட்ட பிச்சை.

வைரமுத்துவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தால், குறிப்பிட்ட சாதியினரின் வாக்குகளை இழக்க நேரிடும் என ரஜினி பயப்படுகிறார். அப்படி இருக்க கூடாது தர்மத்தின் பக்கம் நிற்க வேண்டும் என சீமான் கண்டனங்களை தெரிவித்துள்ளார். 

ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்ததிலிருந்து சீமான் அவருக்கு எதிராக கருத்துக்களை கூறி வருவது குறிப்பிடத்தக்கது.