“தம்பிராமையா வீட்டின் முன் முற்றுகையிடுவோம்” ... ஜீவி-2 விழா மேடையில் சீமான் எச்சரிக்கை! என்ன காரணம்?
தம்பி ராமையா நிறைய படங்களில் நடிக்க போவதில்லை என கூறியதற்கு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, ‘தம்பி ராமையா இங்கு பேசியது போல அவர் படங்களில் நடிப்பதை குறைக்கக் கூடாது. அப்படி செய்தால் அவர் வீட்டு வாசலில் முற்றுகையிடுவோம்” என்று அன்புடன் எச்சரிக்கை விடுத்தார்.
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜீவி-2. கடந்த 2019ல் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக அதன் தொடர்ச்சியாக இது உருவாகி உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய விஜே கோபிநாத் இந்த இரண்டாம் பாகத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். நாயகன் வெற்றி, நாயகி அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி, கருணாகரன் மற்றும் ரமா என முதல் பாகத்தில் இடம்பெற்ற அனைத்து முக்கிய நட்சத்திரங்களும் இந்த இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளனர். ஒய்.ஜி.மகேந்திரன், நடிகர் நாசரின் சகோதரர் அஹமத், விஜே முபாசிர் உள்ளிட்ட ஒரு சில நடிகர்கள் இந்த இரண்டாம் பாகத்தில் இணைந்துள்ளனர்.
இந்தப்படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைக்க, பிரவீண் குமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை கே.எல்.பிரவீன் கவனித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கே.பாக்யராஜ், தம்பிராமையா, சீனுராமசாமி ஆகியோருடன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்து கொண்டார். ஜீவி-2 படத்தின் இசைத்தட்டை சீமான் வெளியிட இயக்குனர் கே.பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் தம்பிராமையா பேசும்போது, ‘பெரும்பாலும் ஒரு படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கு முன் இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கும் ஆனால் ஜீவி-2 படக்குழுவினர் குறுகிய காலத்திலேயே இரண்டாம் பாகத்தையும் எடுத்துவிட்டனர். நாயகன் வெற்றி ஒரு படத்தை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் என்றால் அதில் நிச்சயமாக ஏதாவது இருக்கும் என நம்பலாம். இந்தப்படம் உயரத்தை தொடுமா என சொல்ல முடியாவிட்டாலும் நிச்சயம் தயாரிப்பாளருக்கு துயரத்தை தராது என்று தாராளமாக சொல்லலாம். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ராஜா கிளி மூலம் மீண்டும் இயக்குனராக மாறியுள்ளேன்.. அதனால் இனி நிறைய படங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளேன்” என்று கூறினார்.
தம்பி ராமையா நிறைய படங்களில் நடிக்க போவதில்லை என கூறியதற்கு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, ‘தம்பி ராமையா இங்கு பேசியது போல அவர் படங்களில் நடிப்பதை குறைக்கக் கூடாது. அப்படி செய்தால் அவர் வீட்டு வாசலில் முற்றுகையிடுவோம்” என்று அன்புடன் எச்சரிக்கை விடுத்தார். மேலும் “ஆஹா ஓடிடி தளத்தை தமிழிலும் கொண்டுவர வேண்டுமென அவர்கள் நினைத்ததற்காகவே அவர்களை பாராட்டலாம். எல்லோருக்கும் பிரியாணி சாப்பிடத்தான் ஆசை. ஆனால் கூழ் தானே கிடைக்கிறது. தம்பி சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாக விட்டாலும் கூட ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தெலுங்கில் வெளியான கொண்டபெல்லம் என்கிற படத்தை ஓடிடி தளத்தில் தான் பார்த்தேன்.. அவ்வளவு நேர்த்தியான படம் தியேட்டர்களில் வெளியானதா என்று கூட தெரியாது. ஆனால் ஓடிடி தளத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனால் இருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என பேசியுள்ளார்.