விஸ்வாசம் படத்தின் தாக்கம் இப்போதைக்கு அடங்குவதாக இல்லை. இந்த நிலையில், அஜித், ரஜினி பற்றி விஸ்வாசம் படத் தயாரிப்பாளரான சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் நெகிழ்ந்துள்ளார்.

 

படப்பிடிப்பு தளத்தில் அஜித் கொடுக்கும் மரியாதை குறித்து பேசிய அவர், ’’விவேகத்துக்கு பிறகு லேசான தயக்கம் இருந்தது. நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு 'விவேகம்' போகவில்லை. ஆனால், அஜித் விடாப்பிடியாக இந்த கூட்டணி கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு அவரே அழைத்து படம் பண்ணலாம் எனக் கேட்டுக்கொண்டார். பிறகு இந்த படத்தின் ஸ்கிரிப்டை சிவா எங்களுக்கு சொல்லும்போதே சில இடங்களில் எங்களுக்கு கண்ணீர் வந்தது. அப்போதே அவருக்கு கை கொடுத்தேன். இந்தப் படம் எனக்கொரு 'மூன்றாம் பிறை', 'கிழக்கு வாசல்', 'எம்டன் மகன்' மாதிரி படமாக அமையும் என்று சொன்னேன். அதைப் போலவே அமைந்து விட்டது.

ஒவ்வொரு நாள் படப்பிடிப்பின் போதும் அஜித் “இந்தப் படத்தில் எல்லா விஷயமுமே நல்லதாகவே அமைகிறது” என்று சொல்லிக்கொண்டே இருப்பார். ஆரம்பம் முதலே அவருக்கு இந்தப் படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்து கொண்டே இருந்தது. படம் ரிலீஸான மறுநாள் அஜித் சாரை அழைத்தேன் ”நாம் எதிர்பார்த்தது போன்றே படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். உங்களுடைய கடின உழைப்பினால்தான் இந்தப் படம் வெற்றி பெற்றுள்ளது" என்று கூறினேன்.

வேலை என்று வந்துவிட்டால் அஜித் நேரம், காலம் பார்க்கமாட்டார். எவ்வளவு நேரம் ஆனாலும் இருந்து முடித்துவிட்டுத்தான் போவார். ரஜினி சாருடன் 6 படம் வேலை செய்திருக்கிறேன். அவரும் இதே போலத்தான். அடுத்தவருக்கு மரியாதை கொடுக்கும் விஷயத்தில் மற்றவர்கள் அஜித்திடம் கற்றுக் கொள்ள வேண்டும். லைட் மேன் முதல் ஃபைட்டர்கள் வரை அனைவருக்கும் மரியாதை கொடுப்பார் அஜித்’’ என அவர் நெகிழ்ந்துள்ளார்.