தன்னை வைத்து படம் தயாரிக்கும்போது அது ரிலீஸாகும் வரை வேறு நடிகர்களுடன் படம் தயாரிக்கக்கூடாது என்ற அஜீத்தின் கட்டளையை மீறி ‘விஸ்வாசம்’ படத் தயாரிப்பாளர் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன் ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கு அவசர அவசரமாக  பூஜை போட்டார்.

இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த 2 படங்களை தயாரிக்கவிருப்பதாக சத்யஜோதி பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் - தனுஷ் கூட்டணி மீண்டும் இணையும் படத்தையும், ராட்சசன் படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் தனுஷின் 35-வது படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இதில் துரை செந்தில்குமார் இயக்கும் தனுஷின் 34-வது படத்திற்கு விவேக் - மெர்வின் இணைந்து இசையமைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர தனுஷ் வெற்றிமாறனின் வடசென்னை 2, அசுரன் படங்களில் நடிக்கவிருக்கிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், தான் இயக்கி நடிக்கும் பிரம்மாண்ட படம் என இந்த ஆண்டு தனுஷ் பிசியாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

’விஸ்வாசம்’ ரிலீஸாக இன்னும் 8 நாட்கள் மீதமுள்ள நிலையில் ‘விஸ்வாசம்’ படத்திற்கு இருக்கும் பெரிய எதிர்பார்ப்பை தனுஷ் படங்களுக்கு தாரை வார்த்திருப்பதாக சத்யஜோதி ஃபிலிம்ஸ் மீது கொலவெறி காண்டில் இருக்கிறாராம் அஜீத்.