சர்கார் படத்தில் புகை பிடிக்கும் காட்சியில் நடித்து சிகரெட்டுகளுக்கு விளம்பரம் செய்வதற்காக நடிகர் விஜய் கோடி கோடியாக பணம் பெற்றுள்ளதாக  பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற பா.ம.க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசியதாவது:- சர்கார் படத்தின் விளம்பர போஸ்டரை நான் பார்த்தேன். அந்த போஸ்டரை பார்த்ததும் எனக்கு கோபம் கோபமாக வந்தது. காரணம் அந்த போஸ்டரில் விஜய் சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கிறார். கேட்டால் ஸ்டைலிசாக இருக்க வேண்டும் என்கிறார்கள். ரஜினிகாந்த் மிகப்பெரிய நடிகர். அவர் ஒரு சூப்பர் ஸ்டார். புகையிலையின் தீங்கை எடுத்துக் கூறியது முதல் அவர் திரைப்படங்களில் புகைபிடிப்பது இல்லை.

ஆனால் விஜயிடம் பல முறை கூறிவிட்டோம். அவர் கேட்க மறுக்கிறார். நான் பழைய ராமதாசாக இருந்திருந்தால் விஜய் படம் தியேட்டர்களில் ஓடியிருக்காது. ஆனால் இப்போதும் கூறுகிறேன் புகை பிடிக்கும் காட்சிகளுடன் படங்களை அனுமதிக்கப்போவதில்லை. எதற்காக நடிகர் விஜய் புகைபிடிக்கும் காட்சியில் நடிக்கிறார். விஜய் சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து கோடி கோடியாக பணம் வாங்கியிருக்கலாம். அதைத் தவிர வேறு என்ன காரணத்திற்காக புகை பிடிக்கும் காட்சிகளை திரைப்படத்தில் விஜய் நடிக்கப்போகிறார்.

சர்கார் படத்தில் இருந்து புகைபிடிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை கேட்டுக் கொள்கிறேன். இல்லை என்றால் நடக்கும் விபரீதத்திற்கு நாங்கள் பொறுப்பு அல்ல. இவ்வாறு ராமதாஸ் பேசியுள்ளார். முன்னதாக அன்புமணி ராமதாசும் விஜய் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்க கூடாதுஎன்று கூறியிருந்தார்.