Saritha Nair controversy : விஷம் கொடுத்து கொலை முயற்சி... டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் கொடுக்கும் சர்ச்சை நடிகை...
Saritha Nair controversy : உடல் நலம் தேறியதும் எனக்கு விஷம் கொடுத்தது யார்? என்பதை கூறுவேன்”என சரிதா நாயகர் நீதிமன்றத்தில் கூறியதால் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சோலார் பேனல் முறைகேடு விவகாரம் மாநிலத்தை உலுக்கியது. இது தொடர்பாக நடிகை சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். பின்னர், சரிதா நாயர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவர், காங்கிரஸ் அரசில் அமைச்சர்களாக இருந்த பலரும் பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டினார். மேலும், அப்போதைய முதல்வர் உம்மன்சாண்டி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹிபி ஈடன் ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறினார். இது கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அம்மாநிலத்தில் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் சோலார் பேனல் மோசடி புகாரில் சரிதாநாயர் சிக்கினார்.. இவர் கோவை வடவள்ளியில் நிறுவனம் நடத்தி, காற்றாலை அமைத்துக் கொடுப்பதாக அறிவித்தார். இதையடுத்து, வடவள்ளியை சேர்ந்த தியாகராஜன் ரூ.28 லட்சமும், ஊட்டியை சேர்ந்த வெங்கட்ரமணன், ஜோயோ ஆகியோர் ரூ.5½ லட்சமும் கொடுத்தனர். ஆனால் சரிதா நாயர் குறிப்பிட்டபடி காற்றாலை அமைத்து கொடுக்கவில்லை
இதுதொடர்பாக சரிதா நாயர், அவரின் முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் மற்றும் மேலாளர் ரவி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு கோவை 6-வது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இந்த வழக்கில் அம்மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது.
அதோடு கடந்த 2015-ம் ஆண்டு கொட்டாரக்கரை அருகே சரிதா நாயர் காரில் சென்று கொண்டிருந்தார். நள்ளிரவு ஒரு கும்பல் வழிமறித்து காரை அடித்து நொறுக்கியது. பின்னர் அவரையும் தாக்க முயன்றது. இந்த வழக்கு கொட்டாரக்கரை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக சரிதா நாயர் நீதிமன்றம் வந்தார். அப்போது அவர் கூறியதாவது: “எனக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி நடந்தது. இதனால் எனது உடல் நலம் பாதிக்கப்பட்டது. நான் தற்போது வேலூர் மற்றும் திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று வருகிறேன். உடல் நலம் தேறியதும் எனக்கு விஷம் கொடுத்தது யார்? என்பதை கூறுவேன்” இவ்வாறு அவர் கூறினார். இது, கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.