இந்தப் படத்தை சரவணா ஸ்டோர் விளம்பரப் படங்களை தொடர்ந்து எடுத்து வரும் இரட்டை இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரி இயக்குகிறார்கள். 6 மாதங்களுக்கு முன்பே தொடங்க வேண்டிய படப்பிடிப்பு தள்ளிப்போய் விட்டது. காரணம், பணம் பாதாளம் வரை பாயும் என்று நினைத்து களத்தில் குதித்தவர்களுக்கு பேரதிர்ச்சி. நயன்தாராவை ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். முதல் முயற்சியிலேயே நயன்தாரா நழுவி விட்டார். 

அடுத்து சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் வந்து முகம் காட்டிய தமன்னா, ஹன்சிகா, உள்ளிட்ட அரை டஜன் ஹீரோயின்களை நாடி இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கூட அண்ணாச்சியுடன் டூயட் பாடத் தயாராக இல்லை. விளம்பரம் வேற... படம் வேற... எங்க கேரியரை கெடுத்துக்க விரும்பவில்லை’’ என முகத்திற்கு நேராகவே முறுக்கிக் கொண்டார்களாம். பணம் பாதாளம் வரை பாயும் என நினைத்தவர்கள் அந்தப் பணம் உள் பாக்கெட்டை கூட உபசரிக்கும் நிலையில் இப்போது இல்லை என்பதை உணர்ந்து கொண்டார்கள். வேறு வழியின்றி ஹிந்தி ஹீரோயின்களை நாடி மும்பையில் டேரா போட்டிருந்தார்கள். 

எப்படியோ ஒரு ஹோரோயின் தயாராகி விட, இதோ படப்பிடிப்புக்கு முன் நடக்க வேண்டிய பணிகளை ஆரம்பித்து விட்டனர். ரூ.30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஜேடி-ஜெர்ரி இயக்க உள்ள இந்த படத்தில் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

அப்போது முதல் அருள் அண்ணாச்சி படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என படப்பிடிப்பு குழு அறிவித்துள்ளது.  ஏற்கெனவே இரட்டை இயக்குநர்களான ஜேடி -ஜெர்ரி விசில், அஜித் நடித்த உல்லாசம் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளனர்.