Asianet News TamilAsianet News Tamil

எங்கள் நோக்கம் லாபம் இல்லை! இலவச மெட்ரோ வசதியுடன்.. சந்தோஷ் நாராயணன் நடத்தும் ‘நீயே ஒளி' இசை நிகழ்ச்சி!

‘அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழ் ரசிகர்களிடம் தனித்துவமான இசைகலைஞர் என்ற அடையாளத்தைப் பெற்றிருக்கும் சந்தோஷ் நாராயணன்.. முதன்முதலாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‘நீயே ஒளி’ எனும் பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். 
 

Santhosh Nayarayanan neeye oli music concert mma
Author
First Published Feb 9, 2024, 2:30 PM IST

இது தொடர்பாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன் போது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் துணை மேலாளர் விஜய்குமார், இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான ‘மேக்கிங் மொமெண்ட்ஸ்’ அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சந்தோஷ் நாராயணன் பேசியதாவது...

உலகளவில் இசைநிகழ்ச்சி என்றால் திறந்தவெளியில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து அவர்களுக்கு  விருப்பமான இசையை ரசிக்கமுடியும். இசைகலைஞர்கள் இசைக்கும் இசையை நேரடியாக அனுபவிக்கமுடியும். இத்தகைய இசை நிகழ்ச்சி பொதுவாக கட்டுப்பாட்டுடனும், பாதுகாப்புடனும் நடைபெறும். அதற்கு நன்றாக உட்கட்டமைப்புடன் கூடிய திறந்த வெளி அரங்கம் தேவை. அத்தகைய அரங்கமாக சென்னையில் அமையப்பெற்றிருப்பது தான் நேரு ஸ்டேடியம். 

Santhosh Nayarayanan neeye oli music concert mma

இந்த ஸ்டேடியத்தில் ‘நீயே ஒளி’ இசை நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என்று தீர்மானித்தவுடன் இந்த மைதானத்தின் நிர்வாகத்திலுள்ள ஐ ஏ ஏஸ் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையை தொடங்கினோம். முதலில் நாங்கள் ரசிகர்கள் வருகைத் தருவதற்கும், அவர்கள் சிரமமில்லாமல் இசை நிகழ்ச்சியைப் பார்த்து  ரசிப்பதற்கும், அவர்கள் எதிர்பார்க்கும் வசதிகளைசெய்து கொடுப்பதற்கும் தான் முக்கியத்துவம் அளித்தோம். இதற்காக நாங்கள் கடந்த இரண்டு வாரங்களாக இந்த மைதானத்தில் முன்னேற்பாடுகளை செய்து வருகிறோம். 

சென்னையில் நடைபெறும்  இசைநிகழ்ச்சியின் நோக்கம் லாபம் மட்டுமல்ல. ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை தரவேண்டும் என்பதற்காக விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இது ஒரு கிரீன் கான்செர்ட். ‘நீயே ஒளி’என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது ஏன்? என்றால், ரசிகர்களை முன்னிலைப்படுத்துவதற்காகத்தான் வைத்திருக்கிறோம். மேலும் புத்தபெருமானின் வாசகத்தில் இந்த சொற்களும் உண்டு- அதனால் இதனை தேர்வு செய்திருக்கிறோம். 

இந்திய திரையுலக இசையமைப்பாளர்களின் இசை நிகழ்ச்சி என்றால்... வழக்கமானதொரு உள்ளடக்கம் இருக்கும். அது வெற்றிப்பெற்ற உத்தியும் கூட ஆனால் எங்களின் இசைக்குழு நடத்தும் ‘நீயே ஒளி’ எனும் இசைநிகழ்ச்சி இதிலிருந்து மாறுப்பட்டதாக இருக்கும். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் நான் மட்டுமல்லாமல் இந்தியாவிலிருந்தும் மற்றும் சர்வதேச நாடுகளிலிருந்தும் பல்வேறு திறமையான இசை கலைஞர்கள் மற்றும் நடன கலைஞகள் என பலர் கலந்துகொள்கிறார்கள்.

Santhosh Nayarayanan neeye oli music concert mma  

இந்நிகழ்வில் என்னுடைய இசையில் உருவான பாடல்களுடன் இசைஞானி இளையராஜா, மெல்லிசை மன்னர் எம்எஸ்வி, ஏ. ஆர். ரஹ்மான், ஜீ வி பிரகாஷ் குமார், அனிரூத், யுவன் சங்கர் ராஜா ஆகியோர்களின் பாடல்களும் இடம்பெறும். கான்செர்ட்டின் கிராஃப் கூட எமோஷனலாக இருக்கும்.ஒரு திரைப்படம் போல் எங்கேயும் நிற்காமல் தொடர்ந்து மூன்று மணி நேரம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்த கான்செர்ட் நடக்கும். இது ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும். 

நான் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு இசை நிகழ்ச்சிகளிலும் வெவ்வேறு எதிர்பாராத அனுபவம் கிடைத்திருக்கிறது. அந்த அனுபவத்தினை முன்மாதிரியாக வைத்து தான் ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், ‘நீயே ஒளி’ என இசை நிகழ்ச்சிக்கு பெயரிட்டு, பிப்ரவரி 10 ஆம் தேதி மாலையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்துகிறோம்.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தை யாரும் தவறவிடவேண்டாம். ஏனெனில் அதில் இந்தியாவின் எதிர்கால சாதனையாளர்களான பதினைந்து இசை கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தவிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவளிப்பதற்காகவே ரசிகர்கள் இந்நிகழ்ச்சிக்கு வருகைத் தரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். கான்செர்ட் எனும் இந்த வடிவத்திலான பொழுதுபோக்கிற்கு மக்களின் ஆதரவு இருப்பதால் இதற்கு பெரும் சந்தை இருக்கிறது. அதற்கான தொடக்கமாக இதனை நாங்கள் கருதுகிறோம். இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு இசைத்துறையில் கற்பனையுடன் கூடிய ‘நீயே ஒளி’ போன்ற கான்செர்ட் பிரபலமாகும். அப்போது இதற்கு ஏராளமான விளம்பரதாரர்கள் கிடைக்கலாம். இதனால் இசை ரசிகர்களுக்கு எதிர்காலத்தில் இன்னும் குறைந்த கட்டணத்தில், இதை விட சிறப்பான இசை நிகழ்ச்சியை ரசிக்கலாம். 

சென்னையைப் பொருத்த வரை மக்கள் பொழுதுபோக்கில் ஆர்வம் காட்டுபவர்கள் அதிகம்.  தற்போது ஒரு கோடி பேருக்கு மேல் சென்னையில் இருக்கிறார்கள். இதில் முப்பதாயிரம் பேர் வரை இது போன்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தங்களின் ஆதரவைத் தெரிவிப்பதுடன் மகிழ்ச்சியுடன் ஓரிடத்தில் திரண்டு, இசையால் ஒன்றிணையவே விருப்பம் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய இசையார்வம் கொண்ட புதிய தலைமுறை ரசிகர்களை ஒன்றிணைக்கும் புதிய பொழுதுபோக்கு தளமாகவும் இந்நிகழ்ச்சி அமையும் என நம்புகிறேன்.

Santhosh Nayarayanan neeye oli music concert mma

இந்நிகழ்ச்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட இணையதளம் மூலம் டிக்கெட் வாங்குபவர்கள்.. மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம். இந்த டிக்கெட்டை காண்பித்தால் அதிலுள்ள க்யூ ஆர் கோடு மூலம் ரசிகர்கள் மெட்ரோவில் பயணிக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் இந்நிகழ்ச்சியின் ஏற்பட்டாளர்கள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த சலுகையை ஊக்கப்படுத்தும் வகையில் நான் உள்ளிட்ட இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இசைகலைஞர்கள் சென்னையிலுள்ள ஏதேனும் ஒரு மெட்ரோ ரயிலில் பயணித்து, சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வருகைத்தந்து, அங்கிருந்து 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நேரு ஸ்டேடியத்திற்கு வருகை தரவிருக்கிறோம். அதேபோல் இந்நிகழ்ச்சி நிறைவடைந்ததும் மெட்ரோ ரயிலில் பயணித்து வீடு திரும்ப போகிறேன். அந்நாளில் மெட்ரோ ரயில் இரவு பன்னிரண்டு மணி வரை இயங்கும் என தெரிவித்திருக்கிறார்கள். இதற்காக மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சிக்கான  டிக்கெட் விற்பனையில் முழுக்க  வெளிப்படையான அணுகுமுறையைத் தான் பின்பற்றவிருக்கிறோம். அதனால் அனைத்த தரப்பு ரசிகர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வகையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட முப்பதாயிரம்  ரசிகர்கள் இந்நிகழ்ச்சிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். எனக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரை நட்சத்திரங்கள், திரைப்பட இயக்குநர்கள், இசை கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திரைத்துறையினருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறேன். அவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.  ” என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios