10 வருஷமா இதேநிலை தான்... அலட்சியம்; தவறான நிர்வாகம்; பேராசையே வெள்ளத்துக்கு காரணம் - சந்தோஷ் நாராயணன் ஆதங்கம்
அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசையாலே சென்னையில் இப்படி பெருவெள்ளம் ஏற்பட்டு உள்ளதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சாடி உள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனமழை வெளுத்து வாங்கியது. இடைவிடாது 30 மணிநேரம் பெய்த மழையால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. இந்த வெள்ளத்தினால் ஏராளமான மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கிப்போயினர். பொதுமக்களைப் போல் சினிமா பிரபலங்களும் இந்த பெருவெள்ளத்தில் சிக்கி மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.
நடிகர் விஷால் தன்னுடைய வீட்டில் தண்ணீர் தேங்கி உள்ளதாக குறிப்பிட்டு சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவை விமர்சித்து இருந்தார். இதேபோல் நடிகர் விஷ்ணு விஷால், அமீர் கான் ஆகியோரும் வெள்ளத்தில் சிக்கினர். பின்னர் தகவலறிந்த மீட்புப்படை வீரர்கள் அவர்களை மீட்டனர். பின்னர் அவர்கள் அனைவரையும் தனது வீட்டுக்கு வரவழைத்து அடைக்கலம் கொடுத்து தன் அன்பை வெளிப்படுத்தினார் அஜித்குமார்.
இந்த நிலையில், பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன், இந்த வெள்ளத்தால் தன் பகுதி மக்கள் பட்ட கஷ்டங்களை கூறி அரசையும் வெளுத்து வாங்கி இருக்கிறார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : “10 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி அது வடிய குறைந்தது ஒரு வாரம் ஆகிறது. எங்கள் பகுதியில் குறைந்தது 100 மணிநேரம் மின்வெட்டு இருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த ஆண்டு ஏற்கனவே அது புதிய உச்சத்தை தொட்டுவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், நாங்கள் வசிக்கும் கொளப்பாக்கம், ஒரு ஏரியோ அல்லது 'தாழ்வான' பகுதியோ அல்ல, சென்னையில் உள்ள மற்ற பகுதிகளை விட எங்களிடம் ஏராளமான திறந்தவெளி நிலங்களும், குளங்களும் உள்ளன. வெறும் அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை ஆகியவை தான் மழை நீர் மற்றும் கழிவுநீரை ஒரே ஒரு பாசனக் கால்வாயில் கொட்டுவதற்கு வழிவகுத்துவிட்டது.
அது ஒவ்வொரு முறையும் ஆறு போல் பெருக்கெடுத்து எங்கள் குடியிருப்பு வாசிகளை பாதிக்கிறது. இந்த நேரத்தில் ஏதேனும் நோயோ அல்லது மருத்துவ அவசரநிலையோ ஏற்பட்டால் அது மரணத்தில் தான் முடிகிறது. எங்கள் மக்களுக்காக, ஜெனரேட்டர் வசதி உள்பட பிற முக்கியமான தேவைகளுக்கு உதவ என்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறேன்.
மீட்புப் பணிகளுக்காக என்னிடம் ஒரு படகு மற்றும் சில மோட்டார் பம்புகள் நிரந்தரமாக உள்ளன. சென்னைவாசிகளின் தைரியத்துக்கு பாராட்டுகள், நான் எங்கு சென்றாலும் அவர்களிடம் மிகவும் அன்பும் நேர்மறையும் இருக்கிறது. இந்த தீர்வுக்கான நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன். நியாயமற்ற எதிர்பார்ப்புகள் எனக்கு இல்லை, பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்” என ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... பழனியில் தண்டாயுதபாணி கோவிலில் தங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாடு மேற்கொண்ட நடிகர் யோகிபாபு