ஒரே நாளில் 47 கோடி ரூபாய் வசூல் செய்தது மூலம் பாகுபலி 2 படத்தின் சாதனையை அண்மையில் வெளியான திரைப்படம் ஒன்று முறியடித்துள்ளது.   பாகுபலி 2 திரைப்படம் வெளியான 3வது நாளில் சுமார் 46. 50 கோடி வசூலித்தது. இது தான் இந்திய திரைப்படம் ஒன்று ஒரு நாளில் செய்த அதிகபட்ச வசூல் சாதனை. இந்த நிலையில் பாகுபலி 2 திரைப்படம் வெளியாகி ஒரு ஆண்டுக்கு பிறகு அந்த சாதனையை சஞ்சு என்கிற இந்திப் படம் முறியடித்துள்ளது. பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. சஞ்சய் தத்தாக இளம் நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ளார்.  கடந்த வெள்ளிக்கிழமை வெளியான சஞ்சு திரைப்படம் முதல் நாளில் 34.75 கோடி ரூபாய் வசூல் செய்தது. இரண்டாம் நாளில் சஞ்சுவின் வசூல் 38 கோடியே 60 லட்சம் ரூபாயாக உயர்ந்தது. படம் நன்றாக இருப்பதாக வெளியான விமர்சனங்களை தொடர்ந்து 3வது நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று  46.71 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் பாகுபலி திரைப்படம் ஒரு நாளில் வசூல் செய்த அதிகபட்சத் தொகையான 46.50 கோடியை சஞ்சு முறியடித்துள்ளது.
  மேலும் வெளியான மூன்று நாட்களில் சஞ்சு திரைப்படம் சுமார் 120 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே சஞ்சு தான் அதிக வசூலுடன் முதல் இடத்தில் உள்ளது. சல்மான் கானின் ரேஸ் 3 திரைப்படம் கூட சுமார் 106 கோடி ரூபாய் மட்டுமே முதல் மூன்று நாட்களில் வசூலித்து கொடுத்தது. பாகுபலி 2 உடன் போட்டி போட்டு நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் போன்றோரால் கூட சாதனையை முறியடிக்க முடியவில்லை.   ஆனால் இளம் நடிகரான ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான சஞ்சு பாகுபலி 2 சாதனையை முறியடித்துள்ளது. இதன் மூலம் இந்தி திரையிலகின் சூப்பர் ஸ்டார்கள் பட்டியலில் ரன்பீர் கபூர் இணைந்துள்ளார்.