ஏகப்பட்ட சிக்கல்களுடன் நேற்று ரிலீஸாகாமல் மூன்று நாள் பஞ்சாயத்தில் சிக்கித்தவித்த விஜய் சேதுபதியின் ‘சங்கத் தமிழன்’படம் நேற்று இரவுக் காட்சியாக ஒன்றிரண்டு இடங்களில் ரிலீஸானது. அனைத்துப் பிரச்சினைகளும் பேசித்தீர்க்கப்பட்டு விட்டதாகவும் தமிழகத்தின் அத்தனை செண்டர்களிலும் இன்று காலை முதல் படம் ஓடத்தொடங்கும் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

விஜய் சேதுபதிக்கு சம்பள பாக்கி, இதற்கு முந்தைய ‘வீரம்’படத்தின் செட்டில்மெண்ட் பாக்கி, படத்தை வாங்கிய விநியோகஸ்தர் முழுத்தொகையையும் செட்டில் செய்யவில்லை என்று பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு நேற்று வெளியாகவேண்டிய சங்கத் தமிழன் படம் ரிலீஸாகவில்லை. இதனால் கொதிப்படைந்த விஜய் சேதுபதி ரசிகர்கள்,...ஒரு நடிகனையும் , இயக்குனரையும் இப்படி இழிவுபடுத்துவது நல்லதல்ல @VijayaProdn @LIBRAProduc வன்மையாக கண்டிக்கிறோம் by Makkal selvan @VijaySethuOffl fans மிகவும் மோசமான நாள்...என்பது போன்ற கமெண்டுகளால் தயாரிப்பு தரப்பை ட்விட்டரில் வறுத்தெடுத்தனர்.

மூன்றாவது நாளாக நேற்று இரவு வரை நீண்ட பஞ்சாயத்துகள் ஒரு வழியாக முடிவுக்கு வந்து சென்னை உட்பட சில ஊர்களில் மட்டும் நேற்று இரவுக்காட்சிக்கு படம் ரிலீஸ் செய்யப்பட்டது என்றும் இன்று காலைக் காட்சி முதல் அனைத்து ஊர்களிலும் சங்கத்தமிழன் ஓடும் என்றும் தயாரிப்பாளர் தரப்பு அறிவித்துள்ளது. இதனால் மகிழ்ந்த விஜய் சேதுபதி ரசிகர்கள்,...ஒருத்தன் வரணும்னு ஆண்டவன் முடிவு பண்ணிட்டான்னு வச்சிக்கோ, நீ என்ன தான் கதவை சாத்தி தாப்பாள் இழுத்து பூட்டு போட்டாலும் பூட்டு லாக் ஆகாது,...கெத்தா ஜெயிக்கவந்துட்டான் இந்த #சங்கத்தமிழன்...என்று கொண்டாடி வருகிறார்கள்.