சந்தன மரக் கடத்தல் வீரப்பன் வாழ்ந்த சத்தியமங்கலம் வனப்பகுதியில் பணப் புதையல் இருப்பது உண்மையே என்று அவருடைய மகள் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
சந்தன மர கடத்தல்காரரான வீரப்பனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். வித்யா ராணி பாஜகவில் உள்ளார். இன்னொரு மகள் விஜயலட்சுமி தமிழக வாழ்வுரிமை கட்சியில் உள்ளார். வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியும் தமிழக வாழ்வுரிமை கட்சியில் உள்ளார். இந்நிலையில் விஜயலட்சுமி முதன் முறையாக ‘மாவீரன் பிள்ளை’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் விஜயலட்சுமி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது விஜயலட்சுமி கூறுகையில், “ ‘மாவீரன் பிள்ளை’ படத்தில் உதவும் குணம் கொண்ட வக்கீலாக நடித்திருக்கிறேன். தொடர்ந்து நல்ல கதை அம்சம் உள்ள திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். என்னுடைய தந்தை வாழ்ந்த சத்தியமங்கலம் வனப்பகுதியில் பணப் புதையல் இருப்பது உண்மைதான். அது எங்கே இருக்கிறது என்பது என்னுடைய தந்தை வீரப்பனுக்கும், அவருடைய நெருங்கிய நண்பர் கோவிந்தனுக்கும் மட்டுமே தெரியும். ஆனால், அவர்கள் இருவருமே உயிருடன் இல்லை. ஆனால், பணப் புதையல் இருப்பது உண்மை” என்று விஜயலட்சுமி தெரிவித்தார்.
