இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி. தெலுங்கில் சமுத்திரக்கனி நடிக்கும் முதல் படமாகும் இது.

சசிக்குமாரை வைத்து ‘போராளி’ படத்தை இயக்கிய பின் முழுநேர நடிகராக மாறியிருந்த சமுத்திரக்கனி, சமீபத்தில்தான் ‘நாடோடிகள் 2’ படத்தை இயக்கிமுடித்திருக்கிறார். இந்நிலையில் ராஜமவுலி என்கிற ராட்சச இயக்குநரிடமிருந்து வந்த அழைப்பால் திகைத்துப்போயிருக்கிறார் சமுத்திரக்கனி.

’நாடோடிகள்’ ரிலீஸான சமயம் என் நடிப்பைப் பாராட்டி நீண்ட மெசேஜ் ஒன்றை அனுப்பியிருந்தார் இயக்குநர் ராஜமவுலி. அதிலிருந்து அவரிடம் தொடர்ந்து டச்சில்தான் இருந்து வந்தேன். கடந்த வாரம் திடீரென்று அவரிடமிருந்து போன். வீட்டுக்கு வரச்சொன்னார். அன்பாக உபசரித்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்தி வைத்து, முடிவில் என் படத்துல மெயின் கேரக்டர் ஒண்ணு பண்றீங்க என்று சர்ப்ரைஸ் தந்தார். மறுபேச்சின்றி ஒப்புக்கொண்டேன்’ என்கிறார் சமுத்திரக்கனி.

இந்திய சினிமாவில் 2019ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒரு படத்தில், அதுவும் ஒரு முக்கியவேடத்தில் கமிட் ஆகியிருக்கும் சமுத்திரக்கனி அடைந்திருக்கும் சந்தோஷத்தின் அளவை சொல்லியா தெரியவேண்டும்?.