கைவசமிருக்கும் ‘96 ரீமேக் மற்றொமொரு புதிய படம் ஆகியவற்றை முடித்து விட்டு குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகளுக்காவது திரை உலகை விட்டு ஓய்வெடுக்கவிருக்கவிருப்பதாகவும் அடுத்தடுத்து தொடர்ச்சியாக இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகே மீண்டும் படங்களில் நடிக்கவிருப்பதாகவும் நடிகை சமந்தா தனக்கு நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளார். இச்செய்தியால் சமந்தாவின் ஆந்திர ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடைசியாக வெளிவந்த ‘ஓ பேபி’பட ரிலீஸுக்குப் பின் கணவர் நாக சைதன்யாவுடன் நீண்டதொரு வெளிநாட்டுப் பயணம் சென்றிருந்த நடிகை சமந்தா சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத் திரும்பினார். வழக்கமாக பலரிடமும் உற்சாகமாகக் கதை கேட்கும் வழக்கம் கொண்ட அவர் வெளிநாட்டுப் பயணம் முடிந்த பிறகு பிரபல இயக்குநர்களிடம் கூட கதை கேட்பதை தவிர்த்து வந்தார்.

இது குறித்து சமந்தாவுக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோது அவர் தன் கைவசம் இருக்கும் பாதி முடிந்த நிலையில் உள்ள ‘96 மற்றும் ஏற்கனவே கதை கேட்டு ஓகே பண்ணப்பட்டுள்ள இன்னொரு படம் தவிர்த்து வேறு எந்த புதிய படங்களில் நடிக்கப்போவதில்லை எனவும் தனக்கு 33 வயது ஆகி விட்டதால் இனியும் குழந்தைகள் சமாச்சாரத்தை தள்ளிப்போடாமல் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இச்செய்தி ஆந்திரத் திரையுலகில் மெல்ல பரவி வருவதால் தாயாகப் போகும் சமந்தாவை நினைத்து சந்தோஷப்படுவதா அல்லது இன்னும் இரண்டே படங்களுடன் டாட்டா காட்டப்போவதை நினைத்து துக்கம் கொள்வதா என்று தெரியாமல் குழம்பிப்போயுள்ளனர் அவரது ரசிகர்கள்.