தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணியில் உள்ள நடிகை சமந்தா, இன்னும் ஓரிரு மாதங்களில் சினிமாவுக்கு குட்பை சொல்லப் போவதாக வெளியாகியுள்ள தகவலால், அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் மூலம் 2010ஆம் ஆண்டில் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை சமந்தா, அதே ஆண்டு ஏ மாய சேசாவே என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரைப்பட உலகிலும் கால் பதித்தார். நடித்த படங்கள் பெரும்பாலும், சமந்தாவுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்ததால், ஏராளமான ரசிகர் வட்டம் உருவானது. இதனால், இரு மொழிப் படங்களிலும் முன்னணி நடிகையாக சமந்தா வலம் வந்தார்.தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை காதலித்து, கடந்த ஆண்டு கைப்பிடித்த சமந்தா, திருமணம் முடிந்து சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அரிதாரம் பூசி, நடிக்கத் தொடங்கினார். திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான நடிகைகளுக்கு சரிவே ஏற்படும் என்றாலும், சமந்தா நடிப்பில் வெளியான மகாநதி, இரும்புதிரை, ரங்கஸ்தலம் ஆகிய படங்கள் ஹிட்டாகின. இதனால், யூடர்ன் சீமராஜா, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களிலும் நடித்த சமந்தா, அடுத்தடுத்த படங்களிலும் புக் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது.இந்த நிலையில்தான், நடிகை சமந்தா நடிப்புக்கு குட்பை சொல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனக்கு ஒரு குழந்தை பிறந்தால், அதுவே என் உலகமாக மாறிவிடும் என ஏற்கெனவே ஒருமுறை சமந்தா கூறியிருந்ததால், அவர் தாயாக தயாராகி வருவதாக கூறப்படுகிறது.ஆனால், இந்த வதந்திகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ள சமந்தா தரப்பு, சினிமாவுக்கு முழுக்குப் போடும் எண்ணம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளது. தற்போது யூடர்ன் படத்தில் நடித்து வரும் சமந்தா, அடுத்ததாக கணவர் நாகசைதன்யாவுடன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. கணவர் படத்தை முடித்த பிறகு, மேலும் 2 மெகா ஸ்டார்களுடன் சமந்தா இணைய ஒப்பந்தம் ஆகியுள்ளதால், இப்போதும் சினிமாவுக்கு டாட்டா சொல்ல வாய்ப்பு இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.சமந்தா தரப்பு என்னதான் விளக்கம் அளித்தாலும், சமந்தாவே விளக்கம் அளித்தால் மட்டுமே எதையும் ஏற்க முடியும் என்று கூறியுள்ள ரசிகர் வட்டம், சமந்தாவின் உதட்டசைவிற்காக காத்திருக்கிறதாம்! இதனிடையே திருமணத்திற்கு பிறகு பிற நாயகர்களுடன் சமந்தா மிகவும் நெருக்கமாக நடிப்பதும், முத்தக்காட்சிகளில் நடிப்பதும் அவரது கணவர் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை என்றும், இதனை புரிந்து கொண்டே சினிமாவில் இருந்து ஒதுங்க சமந்தா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.