நடிகை ரம்பா, நீண்ட இடைவெளிக்குப் பின் தனது சக நடிகரான சல்மான் கானை நேரில் சந்தித்துப் பேசிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
உழவன், உள்ளத்தை அள்ளித்தா, செங்கோட்டை என தமிழில் தொடர்ச்சியாக ஹிட்டடித்த தொடையழகி ரம்பா, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வந்தார். தற்போது திருமணமாகி குடும்பத்தினருடன் செட்டில் ஆகிவிட்ட ரம்பா, நடிப்பதில் இருந்தே ஒதுங்கியுள்ளார். தற்சமயம், தனது கணவரும், தொழிலதிபருமான இந்திரகுமார் பத்மநாதன் உடன் கனடாவில் ரம்பா வசித்து வருகிறார்.

இவர் புகழின் உச்சத்தில் இருந்த நாட்களில், பாலிவுட்டில் அமோக வரவேற்பு இருந்தது. அந்த காலகட்டத்தில், 1997ம் ஆண்டு, சல்மான் கான் உடன் ஜோடி சேர்ந்து, ஜூத்வா என்ற படத்தில் ரம்பா நடித்திருந்தார். இந்த படம் ஹிட் அடித்த நிலையில், அதன்பின் ரம்பா, சல்மான் கானுடன் ஜோடி சேரவில்லை. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பின், நடிகை ரம்பா, சல்மான் கானை நேரில் சந்தித்துப் பேசிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பு கனடாவில் நடைபெற்றுள்ளது. நடிகர் சல்மான் கான் தனது பாலிவுட் நண்பர்களுடன் கனடாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இது குறித்து அறிந்து கொண்ட ரம்பா, சல்மான் கானை சந்திக்க விரும்பியுள்ளார். இதனை கேள்விப்பட்ட சல்மான் கான் உடனடியாக ரம்பாவை வருமாறு அழைத்துள்ளார். உடனே தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சல்மான் கான் இருந்த ஓட்டலுக்கு துள்ளிக் குதித்து ஓடியுள்ளார் ரம்பா. ரம்பா, அவரது கணவர் இந்திரகுமார், மகள்கள் லான்யா, சாஷா மற்றும் உறவினர்கள் சூழ சல்மான் கான் இருக்கும் இந்த புகைப்படங்களை, ரம்பாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு, லைக், ஷேரிங் எகிற தொடங்கியுள்ளது.கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பின் இருவரும் நேரில் சந்தித்துள்ளனர். இதுபோல, பிரபுதேவா, சோனாக்‌ஷி சின்ஹா, கத்ரினா கைஃப், ஜாக்லின் ஃபெர்ணான்டஸ் உள்ளிட்ட பிரபலங்களுடனும் புகைப்படம் எடுத்துள்ள ரம்பா, அதனை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். பாலிவுட் நடிகர், நடிகையருடன் நடைபெற்ற இந்த சந்திப்பு, கிட்டத்தட்ட மீண்டும் ஒரு இந்தி படத்தில் நடித்ததைப் போல இருந்ததாகவும், ரம்பா தெரிவித்துள்ளார். இது மட்டுமின்றி, ரம்பா தற்போது கர்ப்பம் தரித்துள்ளார். விரைவில் தனக்கு 3வது குழந்தை பிறக்கப் போவதாக, அவர் ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.