Salman Khan Controversy : இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து சல்மான் கான் ட்வீட் செய்து பின்னர் நீக்கியதால் சர்ச்சை எழுந்துள்ளது. 'ஆபரேஷன் சிந்தூர்' நேரத்தில் அவர் மௌனம் சாதித்தது குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Salman Khan Controversy : இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு நடிகர் சல்மான் கான் டுவீட் செய்து, பின்னர் அதை நீக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது அவர் மௌனம் சாதித்தது குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். போர் நிறுத்தம் குறித்த அவரது பதிவு வைரலாகி, பலவிதமான எதிர்வினைகளை சந்தித்து வருகிறது.
போர் நிறுத்தம் குறித்து சல்மான் கான் மகிழ்ச்சி
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டவுடன், சல்மான் கான் தனது மகிழ்ச்சியை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். "போர் நிறுத்தத்திற்கு கடவுளுக்கு நன்றி" என்று அவர் பதிவிட்டிருந்தார். சிறிது நேரத்தில் அந்த பதிவை நீக்கிவிட்டார். ஆனால், அப்போது நெட்டிசன்கள் அதன் ஸ்கிரீன்ஷாட்டை எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவரை விமர்சித்து வருகின்றனர்.
சல்மான் கானின் பதிவுக்கு எதிர்ப்புகள்
சல்மான் கானின் பதிவைப் பார்த்த நெட்டிசன் ஒருவர், "'ஆபரேஷன் சிந்தூர்' நேரத்தில் மௌனம் காத்த சல்மான் கான், போர் நிறுத்தத்திற்குப் பிறகு ட்வீட் செய்து நீக்கியுள்ளார். வெட்கமாக இல்லை?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மற்றொரு நெட்டிசன், "போர் நிறுத்தம் குறித்து மட்டுமே கவலைப்படும் சல்மான் கான், பதிவை நீக்கியுள்ளார். ஆனால், அவரது படங்களை என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்" என்று பதிவிட்டுள்ளார். இன்னொருவர், "போர் நிறுத்தம் குறித்து ட்வீட் செய்து, பின்னர் நீக்குவதற்கு பதிலாக உங்கள் நாட்டை ஆதரிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்
4 நாட்கள் போர் போன்ற சூழல்
மே 7 ஆம் தேதி, இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, பாகிஸ்தான் இந்திய நகரங்கள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. மே 7 முதல் மே 10 வரை இந்த மோதல் நீடித்தது. பின்னர், அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

