சீரியல் நடிகை அஞ்சலி பாஸ்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில், பேருந்தில் தனக்கு நடந்த பாலியல் சீண்டல் குறித்து வெளிப்படையாக பேசியிருப்பது அவரின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சக்திவேல் சீரியலில் பேராசிரியை சக்தியாக அஞ்சலி பாஸ்கர் நடித்து வருகிறார். இந்த சீரியலில் பணக்கார வீட்டு பையன் வேல் அவரை காதலிப்பதாக கதை சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சீரியல் நடிகை அஞ்சலி பாஸ்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில், பேருந்தில் தனக்கு நடந்த பாலியல் சீண்டல் குறித்து வெளிப்படையாக பேசியிருப்பது அவரின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
அந்த பேட்டியில் பேசிய அவர் “ நான் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து தான் வந்தேன்.. ஆரம்பக்காலக்கட்டத்தில் எனக்கு ஷூட்டிங் போகக்கூட காசு இருக்காது. எனது தோழிகளின் உடைமைகளை அணிந்து தான் ஷூட்டிங்கிற்கு செல்வேன்.
எனக்கு வாழ்வில் நேர்ந்த மோசமான விஷயம் என்றால் அது ஒருமுறை பேருந்தில் சென்ற போது நடந்தது தான்.
அந்த பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, நடுத்தர வயது முதியவர் என் தோள் மீது உரசிக்கொண்டே இருந்தார். என் மீது தகாத முறையில் கை வைத்தார். இதனால் ஆத்திரத்தில் நான் அவர் மீது ஒரு குத்து விட்டு, அவரை அசிங்கமாக திட்டி தீர்த்துவிட்டு வந்தேன். அவர் உடனே இறங்கி சென்று விட்டார்.
பொதுவாக பெண்களுக்கு பேருந்தில் இதுபோன்று பிரச்சனை ஏற்பட்டால், பேருந்தில் உள்ளவர்கள் தட்டி கேட்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் எனக்கு அந்த பிரச்சனை நேர்ந்த போது அங்கிருந்த பெண்கள் உட்பட யாருமே எனக்காக குரல் கொடுக்கவில்லை. அது தான் எனக்கு அதிக வருத்தத்தை ஏற்படுத்தியது” என்று கூறினார்.
தொடர்ந்து அட்ஜெஸ்மெண்ட் குறித்து பேசிய அவர் “ சீரியலில் சிறப்பாக நடித்துக்கொண்டிருக்கிறேன். என்னை பொறுத்தவரை யாரும் என்னிடம் தப்பாக நடந்து கொள்ள வில்லை. அதே போல் தவறாக பேசுவது, அட்ஜெஸ்ட்மெண்ட்டிற்கு அழைப்பது போன்ற விஷயங்கள் எல்லாம் இல்லை. கடுமையாக உழைத்து நல்ல நடிகையாக வேண்டும் என்பதே எனது லட்சியம்.
சமூகத்தில் இன்னும் பல வழிகளில் பிரச்சனைகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. சமூக வலைதளங்களில் ஃபேக் ஐடியில் சிலர் போடும் மோசமான கமெண்ட்கள் என்னை அதிகமாக காயப்படுத்தும்” என்று தெரிவித்தார்.
