படம் ஹிட்டோ ஃப்ளாப்போ வரவேண்டிய சம்பளத்தை ஒட்டுமொத்தமாகக் கறந்துவிட்டு மறுவேலை பார்ப்பதுதான் நடிகர்,நடிகைகளின் வாடிக்கை. அதிலும் நடிகர்களை விட நடிகைகள் இதில் ரொம்ப கறார்.

இதற்கு நேர்மாறாக தான் நடித்த படம் தோல்வி அடைந்ததால் தனக்கு வரவேண்டிய 25 லட்சம் சம்பள பாக்கியை விட்டுக் கொடுத்து ஆந்திர சினிமா உலகின் உள்ளம் கவர்ந்த கள்வி ஆகியிருக்கிறார் ‘அராத்து ஆனந்தி’ சாய்பல்லவி.

ஷ்ரவானந்த், சாய் பல்லவி நடிப்பில் ஹனு ராகவபுடி இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான தெலுங்குப் படம் ’பாடி பாடி லச்சே மனசு’ . ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

ரிலீசான முதல் நாளே படுதோல்வி என்று அறிவிக்கப்பட்ட ரூ. 22 கோடிக்கு வியாபாரமான இந்தப் படம் ரூ. 8 கோடி மட்டுமே வசூல் செய்தது.  படக் கதாநாயகி சாய்பல்லவிக்கு ஒப்பந்தத்தில் சொன்ன சம்பளத்தில் ஒரு பகுதியை முதலில் கொடுத்த தயாரிப்பாளர், மீதமுள்ள ரூ. 25 லட்சத்தை பட வெளியீட்டுக்குப் பிறகு தருவதாக வாக்குறுதியளித்திருந்தார். 

இந்நிலையில்படம் தோல்வியடைந்தாலும் சாய் பல்லவியின் மீதிச் சம்பளத்தைத் தர அவர் முயன்றுள்ளார். ஆனால் தற்போதைய நிலைமையில் தன்னால் இந்தத் தொகையைப் பெற்றுகொள்ள முடியாது. வசூலில் நஷ்டம் ஏற்பட்டதில் தானும் பொறுப்பேற்பதாக சாய் பல்லவி தயாரிப்பாளரிடம் கூறியுள்ளார். அடுத்த முயற்சியாக  இந்தப் பணத்தை சாய் பல்லவியின் பெற்றோரிடம் தர தயாரிப்பாளர் முயன்றுள்ளார். அவர்களும் அதை வாங்க மறுத்துள்ளார்கள்.

சாய்பல்லவியின் இந்த செயலால் நெகிழ்ந்த தயாரிப்பாளர், ‘சினிமாவில் இப்படிப்பட்ட அபூர்வமான மனுஷிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். என் கஷ்டத்தில் பங்கெடுத்துக்கொண்ட அவர் தன் குணத்திற்காகவே நம்பர் ஒன் நடிகையாக வரவேண்டும்’ என்று மனதார வாழ்த்திருக்கிறார்.