ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன்  நிச்சயதார்த்தம் செய்துகொண்ட ‘சாஹோ’பட நடிகை எவ்லின் ஷர்மா’ திருமணம் எப்போது என்கிற கேள்விக்கு இந்த இடைப்பட்ட காலத்தில் வாழ்க்கையை நன்றாக எஞ்சாய் பண்ணிவிட்டு அப்புறம்தான் திருமணத்தைப் பற்றி யோசிப்போம்’என்று அதிர்ச்சி அளிக்கிறார்.

நடுக்கடலில் தனது வருங்காலக் கணவரை இறுக்கி அணைத்து ஒரு உம்மா கொடுத்தபடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ் கொடுத்திருக்கும் எவ்லின் ஷர்மா  சமீபத்தில் தமிழிலும் வெளியான படம் ‘சாஹோ’படத்தில் நடித்தவர். பஞ்சாபி தந்தையையும், ஜெர்மனிய தாயையும் பெற்ற எவ்லின் இரு நாட்டு வனப்புகளையும் ஒருங்கே பெற்று மாடலாக தன் வாழ்வைத் தொடங்கியவர்.இந்தி, பஞ்சாபி, உருது மொழிகளில் 16 படங்கள் நடித்தவர், சமீபத்திய பிரமாண்டப் படமான ‘சாஹோ’ மூலம் தெலுங்கு, தமிழிலும் கால் பதித்தார்.

இப்போது அம்மணிக்குத் திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. ஒரு நடிகையின் திருமணம் வழக்கமாக எப்படி நிச்சயமாகுமோ அப்படியே ஆஸ்திரேலியத் தொழிலதிபருடன் அமைந்திருக்கிறது. ஒரு நண்பரின் பார்ட்டியில் ‘துஷான் பிந்தி’ என்ற ஆஸ்திரேலியத் தொழிலதிபரை எவ்லின் சந்திக்க நேர, கண்டதும் காதல் பிறந்திருக்கிறது. அப்படியே தொடர்ந்த நட்பில் அடுத்த கட்டத்துக்கு இருவரும் நகர, சினிமா பாணியிலேயே அதை உறுதி செய்திருக்கிறார் துஷான்.

நவராத்திரி நாள்களில் எவ்லினை ஆஸ்திரேலியா வரவழைத்து புகழ்பெற்ற சிட்னி பாலத்தின் அருகே இருவருக்கும் பிடித்த பாடல்களை லைவ்வாக இசைக்க வைத்து மண்டியிட்டு தன் காதலை துஷான் சொல்ல, திருமணத்துக்கு ஓகே சொல்லிவிட்டாராம் எவ்லின். இப்போதைக்கு நிச்சயதார்த்தம் மட்டுமே முடிந்திருக்கும் நிலையில் திருமணம் எப்போது என்று கேட்டால், ‘அதெல்லாம் வாழ்க்கையை நல்லா எஞ்சாய் பண்ணுன பிறகு யோசிக்கவேண்டிய விசயம். இப்போதைக்கு யோசிக்கவேண்டிய அவசியம் இல்லை’என்று அசால்டாக பதில் தருகிறார் எவ்லின் ஷர்மா.