தமிழகத்தில் தாமரையை மலரவைக்கும் முயற்சியில் தமிழிசை தொடர்ந்து படுதோல்வி அடைவதால் இன்னும் ஒரு மாதத்துக்குள் பா.ஜ.க.வின் தமிழக தலைமைக்கு புதியவர் ஒருவர் வருவார் என்கிறார் ‘செகப்பா இருக்கவங்க பொய் சொல்லமாட்டாங்க’ கேடகிரியைச் சேர்ந்த எஸ்.வி.சேகர். அவரது பேச்சில் தலைமைப் பதவி வெறி கோரதாண்டவமாடுகிறது.

பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை மந்தெவெளியில் நடிகர் எஸ்.வி.சேகர் நடத்தினார். அப்போது நிருபர்களிடம் பேசிய அவர்,’என்ன காரணத்தாலோ நான் தமிழக பா.ஜனதாவில் சேர்ந்தது முதல் என்னை எந்த நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை. வாஜ்பாய் அஸ்தி கரைப்பு நிகழ்ச்சிக்காக மட்டும் கூப்பிட்டார்கள். 

எதற்காக என்னை அழைப்பதில்லை என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் எல்லா பிரச்சினைகளும் ஒருநாள்  சரியாகிவிடும். தமிழக பா.ஜனதா தலைமை மாற்றப்பட வேண்டும். நிச்சயமாக மாற்றப்படும். அடுத்தமாதம் (ஆகஸ்டு) அல்லது செப்டம்பருக்குள் அது நடக்கும்.

தி.மு.க. இளைஞர் அணி தலைவராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டிருப்பது அந்த கட்சியின் உள் விவகாரம். ஏற்றுக் கொள்வது, ஏற்றுக் கொள்ளாதது என்பதெல்லாம் தி.மு.க.வினரின் முடிவு.ஆனால் வாரிசு அரசியல் செய்ய தி.மு.க. ஒன்றும் சங்கரமடம் அல்ல என்று கலைஞர் தெரிவித்து இருந்தார். அதை மு.க.ஸ்டாலின் பொய்யாக்கி இருக்கிறார்’என்று சந்தடி சாக்கில் திமுகவும் ஒரு சங்கரமடம்தான் என்கிறார் எஸ்.வி.சேகர்.