இன்றைக்கு இந்திய சினிமாவின் நம்பர் ஒன் திரைக்கதாசிரியர் என்று அறியப்பட்டுள்ள கே.வி.விஜயேந்திரபிரசாத்தை திரையுலகம், ஒரு பிரபலமாக அறிந்துகொள்ளும்போது அவருக்கு 65 வயது என்று சொன்னால் திகைப்பாக இருக்கும். யெஸ் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத்தேதான். அவருடன் பத்து நாட்கள் பணியாற்றிய அனுபவம் குறித்து தமிழ் எழுத்தாளர், திரைக்கதாசிரியர் அஜயன் பாலா தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள பதிவு இது...

...எஸ். எஸ்.ராஜமவுலியின் தந்தையும். பாகுபலி யின் ஆதி கர்த்தாவுமான விஜயேந்திர பிரசாத் சாருடன் இன்று சென்னையில் எடுத்த புகைப்படம். கடந்த மூன்று மாதங்களாக ’தலைவி’ திரைக்கதை விவாதம் தொடர்பாக அவரது ஹைதராபாத் அலுவலகத்தில் மாதத்தில் பத்துநாட்கள் செலவழிக்கும் அரிய சந்தர்ப்பம் கிடைத்தது. 76வயதில் அவருடனிருக்கும் கற்பனையாற்றல் உலக சினிமா பரிச்சயம் ஆகியவை என்னை வியக்க வைத்தது.

அவர் அலுவலகத்தில் மொத்தம் 50க்கு மேற்பட்ட கதைத்தொழிலாளர்கள் . ஐந்துக்கும் மேற்பட்ட திரைக்கதை பணிகள் நடைபெறுகின்றன. அனைவரையும் விட சுறுசுறுப்பு படைபூக்கத்துடன் ஆச்சர்யப்படுத்துகிறார். சிறு வயதில் கடும் போராட்டத்துக்குப் பின் பல தொழிலில் தோற்று சினிமாவுக்கு வந்து உதவி இயக்குனராக வந்து போராடி 40 வயதுக்கு மேல் ஒருபடம் இயக்கி அதுவும் தோற்று பின் பெரிதாக சோபிக்காமல் 65 வயதுக்குப் பின் மகன் இயக்குநராக தலையெடுத்தபின் பெயர் வெளியே தெரிய வந்து இன்று இந்தியாவின் நம்பர் 1 திரைக்கதை யாசிரியாராக இருக்கும் அவருடைய வாழ்க்கையே நமக்கெல்லாம் ஒரு பாடம் கற்றுத்தரும் அற்புத திரைக்கதைதான்’என்று பதிவிட்டிருக்கிறார் அஜயன் பாலா.