தமிழ் ‘ஜிகர்தண்டாவின் ரீமேக்கான ‘வால்மீகி’ படத்திற்கு நடிகை பூஜா ஹெக்டேவுக்கு 2 கோடி சம்பளம் பேசி இருப்பதாக செய்திகள் வைரலாகிவரும் நிலையில் அதை மறுத்திருக்கிறார் இயக்குநர் ஹரிஷ் சங்கர்.

’பேட்ட’ இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் 2014ல் வெளிவந்த படம் ‘ஜிகர்தண்டா’. சித்தார்த்,பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்காக பாபி சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றிருந்தார்.

தற்போது இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் ’வால்மீகி’ என்ற பெயரில் தொடங்கி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஹரிஷ் சங்கர் இயக்கும் இந்தப் படத்தில் சித்தார்த் கதாபாத்திரத்தில் அதர்வாவும், பாபி சிம்ஹா கதாபாத்திரத்தில் வருண் தேஜ் நடித்து வருகின்றனர். இந்தப் படம் அதர்வாவுக்கு முதல் தெலுங்குப் படமாகும்.

லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே நடிக்கிறார். அவருக்கு 15 நாட்கள் கால்ஷீட்டுக்காக ரூ.2 கோடி சம்பளம் பேசி முடிவாகியிருப்பதாகவும் இந்த சம்பளத்தின் மூலம் அவர் தெலுங்கின் முன்னணி நடிகையாகிவிட்டதாகவும் வலைதளங்களில் செய்தி பரவியது. இன்னொரு செய்தியாக இப்படத்தில் தெலுங்கு பவர் ஸ்டார் கல்யாண் ஒரு கவுரவ வேடத்தில் நடிப்பதாகவும் செய்தி பரவியது.

இச்செய்திகளை மறுத்து  விளக்கமளித்திருக்கும் இயக்குநர் ஹரிஷ் சங்கர், “பூஜா ஹெக்டே சம்பளம் குறித்து வெளியாகும் தகவல்கள் உண்மையல்ல. எனக்கு தெலுங்கு பவர்ஸ்டாரை இயக்குவது பிடிக்கும். ஆனால் சமீபத்தில் நடந்த சந்திப்பு பற்றிய செய்தி உண்மையல்ல. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.