தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பில்  "என்.டி.ஆர்." பயோபிக் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டது.  படுமோசமான விமர்சனங்களைப் பெற்ற அந்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இதனால் தனது புகழையும், பாக்ஸ் ஆபீஸ் வசூலையும் மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா. அதற்காக அவர் தேர்வு செய்தது நம்ம இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். கடந்த ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார், பாலகிருஷ்ணா கூட்டணியில் வெளிவந்த "ஜெய் சிம்ஹா" திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. 

எனவே மீண்டும் கே.எஸ்.ரவிக்குமார் உடன் கூட்டணி அமைத்துள்ளார் நந்தமூரி பாலகிருஷ்ணா. தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் 105வது படமான இதை ஹாப்பி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. "ரூலர்" என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சோனல் சவுகான் நடிக்கிறார். சமீபத்தில் வெளியான "ரூலர்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியன ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. போலீஸ் உடையில் கையில் சுத்தியலுடன் கெத்தாக நிற்கும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலானது. 

இதையடுத்து "ரூலர்" படத்தின் டீசரை நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர். சிங்கம் போல கர்ஜிக்கும் தர்மா என்ற போலீஸ் அதிகாரியாக பாலகிருஷ்ணா மாஸ் காட்டியிருந்தார். வழக்கமான பாலகிருஷ்ணா பட பாணியில் அனல் பறக்கும் சண்டை காட்சிகள், மாஸ் பஞ்ச் டைலாக்குகள், கொலைவெறி வில்லன்கள், ஹாட் லவ் சாங்க்ஸ் என அனைத்து அம்சங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதனால் தானோ என்னவோ ஒரே நாளில் "ரூலர்" பட டீசரை 2 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர். இதனால் இந்திய அளவில் யூ-டியூப் ட்ரெண்டிங்கில் "ரூலர்"  பட டீசர் முதலிடம் பிடித்துள்ளது. வெற லெவலில் வெறித்தனம் காட்டியுள்ள ரூலர் திரைப்படத்தை  அடுத்த மாதம் 20ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.