பான் இந்தியா மூவி! எனும் கான்செப்ட் வந்தாலும் வந்தது, சென்னையை நோக்கி டோலிவுட் நடிகர், நடிகைகள் படைதிரட்டி வந்து கொண்டே இருக்கிறார்கள். இதுவரையில் அடிக்கடி அல்லுசில்லு படங்களின் ப்ரமோஷன் பிரஸ்மீட்டாய் போய் உட்கார்ந்து, அலுத்துப் போன சினிமா பத்திரிக்கையாளர்களுக்கு இந்த பிரம்மாண்ட படங்களின் ப்ரமோ நிகழ்வுகள் செம்ம தீனியாகிப் போயுள்ளன.
புஷ்பா படத்தின் தமிழ் வெர்ஷன் அறிமுகவிழா செம்ம அசத்து அசத்திய நிலையில், தற்போது ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. என்னதான் பான் இந்தியா படமென்றாலும் கூட, முக்கிய நடிகர்கள் அத்தனை பேரும் தெலுங்கு நபர்கள் என்பதால், அப்படத்திற்கு ஒரு ‘தமிழ்னஸ்’ கொடுக்கும் பொருட்டு, சிவகார்த்திகேயன் மற்றும் உதயநிதி ஆகியோரை இவ்விழாவிற்கு அழைத்திருந்தனர்.
விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜமவுலிக்கு பெரிய ஐஸ் வைத்துப் பேசிவிட்டு, ‘இரண்டு சிங்கங்களை ஆர்.ஆர். ஆர். படத்தில் நடிக்க வைத்துள்ளார்’ என்று புகழ்ந்தார் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர்.ரை. பதிலுக்கு ராம்சரணோ ‘எனக்கு பிடித்த நடிகர் சிவகார்த்திகேயன். தொகுப்பாளராக இருந்து, நடிகராக இந்தளவுக்கு உயர்ந்துள்ளார். அவர் சூப்பர் ஸ்டார் ஆகலாம்’ என்றுப் பேசிக் கொண்டாடிவிட்டார்.

சொல்லப்போனால், ஆர்.ஆர்.ஆர். பட ப்ரமோஷனை விடவும் சிவகார்த்திக்குதான் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அந்நிகழ்வு மூலம் வேற லெவல் ப்ரமோ கிடைத்துள்ளது! காரணம் இந்த நிகழ்வில் தெலுங்கு ரசிகர்கள் எக்கச்சக்கமாக கலந்து கொண்டனர். கூடவே,இந்த நிகழ்வை யூடியுப் வழியாகவும் பல லட்சம் தெலுங்கு ரசிகர்கள் கண்டுவருகிறார்கள்.
இதெல்லாம் அடுத்து, தெலுங்கில் நேரடி படம் பண்ண இருக்கும் சிவகார்த்திக்கு தாறுமாறு ப்ரமோஷனாக அமைந்துள்ளது. இந்நிலையில், கோலிவுட்டில் கடந்த சில வருடங்களாக தனுஷுக்கும், சிவகார்த்திக்கும் இடையில் கடுமையான மோதல் இருக்கிறது. என்னதான் சிவாவின் வளர்ச்சிக்கு தனுஷின் கை உதவியது என்றாலும், ஏனோ இருவருக்குமிடையில் கடும் உரசல் சமீப காலங்களில்.

இருவரது ரசிகர்களும், இருவரது தரப்பு நண்பர்களும், நலன் விரும்பிகளும் சோஷியல் மீடியா வாயிலாக ஒருவரையொருவர் தாக்கி கடுமையாக மோதிக்கொள்வது வாடிக்கை. இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர். மேடையில், நிகழ்வில் சிவகார்த்திக்கு கிடைத்த பாராட்டும்! ராஜமவுலி, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். மூவரும் சிவகார்த்தியை கொண்டாடிய விதமும் தனுஷ் ரசிகர்களை மிக கடுமையாக உஷ்ணமாக்கியுள்ளது.
அவர்கள் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் “ராஜமவுலியும், ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் பாராட்டிப் பேசியுள்ளார்கள் என்பதற்காக சிவகார்த்தி ஒன்றும் பெரிய அப்பாடக்கர் இல்லை. அந்தப் பட ப்ரமோஷன் மேடைக்காக இவரைப் பயன்படுத்தியுள்ளார்கள் அவ்வளவுதான்.

இரண்டு தேசிய விருதுகளை வாங்கிய எங்கள் தலைவரின் (தனுஷேதான்) திறமைக்கு பக்கத்தில் நிற்க முடியுமா சிவகார்த்தியால்? இவர் லோக்கல் சினிமாவின் ப்ரமோஷனுக்கு பயன்படலாம். ஆனால் எங்க ஆளு நேரடி ஹாலிவுட் மூவியிலேயே நெத்தியடியா நடிக்கிற ஆளு.” என்று கன்னாபின்னான்னு கலாய்க்கிறார்கள்.
ஆனாலும், ஆர் ஆர் ஆர் விழாவில் தனக்கு கிடைத்த சர்ப்பரைஸ் ப்ரமோவை நினைத்து உச்சி குளிர்ந்து போயிருக்கும் சிவகார்த்தி, அதனால் தனுஷ் அண்ட்கோ கடுப்பின் உச்சம் தொட்டிருப்பதை நினைத்து மகிழ்ச்சி டெம்போ எகிறி நிற்கிறார்.
நீ கலக்கு மச்சி!
