மதுரையில் பத்து நாளில் ஒரு சம்பவம் நடக்கும் என்றும் காவல்துறையினர் முடிந்தால் தடுத்துப் பாருங்க, புடிச்சிப் பாருங்க என கடந்த சில தினங்களுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி சகுனி கார்த்தி காவல்துறையினரை மிரட்டிய வாட்ஸ் ஆப் ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.

மதுரையில் முத்து இருளாண்டி மற்றும் சகுனி கார்த்திக் ஆகிய இரண்டு ரவுடிகள் இரு தினங்களுக்கு முன்பு சுட்டுக்கொல்லப்பட்டனர். இருவரும் பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த நிலையில், கைது செய்ய முயன்ற போது போலீசாரை திருப்பி தாக்கியதால் நடந்த சண்டையில் ரவுடி முத்து இருளாண்டி மற்றும் சகுனி கார்த்திக் ஆகியோர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதனிடையே என்கவுண்டர் சம்பவம் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு சகுனி கார்த்திக் உடன் காவல்துறை அதிகாரி ஒருவர் பேசிய ஆடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் வலம் வருகிறது. அந்த ஆடியோவில், காவல்துறையினரை மிரட்டும் தொனியிலும் சவால்விடும் தொனியிலும் பேசியுள்ளான் ரவுடி கார்த்திக்.

இந்த ஆடியோவில், நாங்களும் மனிதர்கள் தானே... ஏன் எங்களை தொந்தரவு செய்றீங்க என்று கேட்கும் சகுனி கார்த்திக்கிடம், ஏன் சண்டை போட்டு அடிச்சீங்க...இது தேவையா என்று காவல் அதிகாரி கேட்கிறார்.

இது தெரியாமல் நடந்து விட்டது.... அது சும்மா நடந்தது என்று கூறுகிறார் சகுனி கார்த்திக், தொடந்து பேசிய கார்த்திக், இப்ப என்னதான் சொல்றீங்க நீங்க. வேணும்னுதான் அடித்தேன் என்னையை பிடிக்க முடியுமா? உங்களாள என்று கேட்க அதற்கு காவல்துறை அதிகாரி, தேவையில்லாம பேசாத போனை வைப்பா என்ற சொல்கிறார்.

உடனே கார்த்திக், இன்னும் 10 நாளில் ஒரு சம்பவம் மதுரையில நடக்கப் போகுது முடிஞ்சா தடுத்து பாருங்க என்றும் சவால் விட்டு பேசுகிறார். அதற்கு அந்த அதிகாரியோ, ஒண்ணுமில்லைப்பா நீ தேவையில்லாமல் பேசுற போனை வைப்பா என்று கூறி போலீஸ் தொலைபேசி இணைப்பை துண்டிக்கிறார். இதனையடுத்தே சகுனி கார்த்திக், அவனது கூட்டாளியை தேடி வந்த போலீஸ், சிக்கந்தசாவடியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த கார்த்திக்கை என்கவுண்டர் செய்து வீழ்த்தியுள்ளனர்.