நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் படப்பிடிப்பில் மயங்கி விழுந்ததால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் ஐசியூவிற்கு மாற்றப்பட்டு உள்ளாராம்.

Robo Shankar Admitted in ICU : நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், படப்பிடிப்பில் மயங்கி விழுந்ததை அடுத்து அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. நேற்று நார்மல் வார்டில் சிகிச்சை பெற்று வந்த ரோபோ சங்கருக்கு உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து, அவர் இன்று ஐசியூ எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு அதில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சு?

ரோபோ சங்கருக்கு மூச்சு விடுவதில் சிக்கல் இருப்பதால் அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அவர் விரைவில் உடல்நலம் பெற்று வர வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ரோபோ சங்கர் கடந்த ஆண்டு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தார். அதேபோல் தற்போதும் மீண்டு வருவார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ரோபோ சங்கர் விஜய் டிவியில் காமெடியனாக தன்னுடைய கெரியரை தொடங்கி, பின்னர் வெள்ளித்திரைக்கு சென்று தனுஷ், விஜய் சேதுபதி, அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றார். இவரது மகளான இந்திரஜாவும் சினிமாவில் காமெடி நடிகையாக நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு அவருக்கு திருமணம் ஆனது. இந்த ஜோடிக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆண் குழந்தையும் பிறந்தது. தாத்தா ஆனதால் செம குஷியில் இருந்தார் ரோபோ சங்கர்.

இந்த நிலையில், ரோபோ சங்கர் உடல்நிலை குறித்து அவரது மகளிடம் இன்ஸ்டாகிராம் வாயிலாக ஏராளமானோர் கேட்டு வந்தாலும், அவர் இதுவரை எந்தவித அப்டேட்டும் கொடுக்கவில்லை. இருப்பினும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ள அவர், அதில் ‘நேரம் நல்லா இல்லேனா தேவையில்லாதவன் கூட தேவையில்லாம பேசிட்டு போவான்’ என பதிவிட்டுள்ளார்.