பிரபல இயக்குனரும், பெப்சி அமைப்பின் தலைவருமான ஆர்.கே.செல்வமணி, இன்று செய்தியாளர்களை சந்தித்து, தமிழகத்திற்காக மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிதியில் சினிமா துறையை சேர்ந்தவர்களுக்காக எந்த ஒரு உதவியும் அறிவிக்கபப்ட்ட வில்லை என தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திரைத்துறையில் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. இதனால் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான பெப்சியைச் சேர்ந்த பல  ஊழியர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். அப்படி சினிமாவில் தினக்கூலி தொழிலாளர்களாக திண்டாடும் தொழிலாளர்களுக்காக நிவாரணம் திரட்டப்பட்டது. ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் பலரும் பெப்சி தொழிலாளர்களுக்காக நிதி வழங்கினர்.

இதைத்தொடர்ந்து தற்போது,  டப்பிங், விஷுவல் எபெக்ட்ஸ், பின்னணி இசை, மிக்ஸிங், எடிட்டிங் உள்ளிட்ட பணிகளுக்கு மட்டுமே துவங்கலாம் என மே 11 ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து சீரியல் மற்றும் படப்பிடிப்புகளுக்கான பணிகளுக்கு ஒரு சில நிபந்தனைகளோடு அரசு அனுமதி கொடுத்துள்ளது.

இந்நிலையில் இன்று, வடபழனியில் உள்ள.... பெப்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரபல இயக்குனரும், பெப்சி அமைப்பின் தலைவருமான ஆர்.கே.செல்வமணி, படப்பிடிப்பிற்கான கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதற்கு நன்றி தெரிவித்தார்.

இதை தொடர்ந்து பேசிய அவர், கொரோனா ஊரடங்கின் காரணமாக தமிழ் திரையுலகில் உள்ள கிட்ட தட்ட, 45 ,000 ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை திரைதிரையால் மத்திய மற்றும் மாநில அரசுகள் எந்த வித நஷ்டத்தையும் கண்டதில்லை. லாபத்தை மட்டுமே கண்டுள்ளனர். தற்போது திரை துறை பணியாளர்கள் கஷ்டப்பட்டு வரும் இந்த நிலைமையில் கூட அரசு அவர்களுக்கு உதவ முன் வராதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், சமீபத்தில் மத்திய அரசு தமிழகத்திற்காக ஒதுக்கிய 20 ஆயிரம் கோடி நிதியில் தனக்கு தெரிந்தவரை, திரையுலகை சேர்ந்தவர்களுக்கு என எந்த உதவிகளும் அறிவிக்கப்படவில்லை என்றும் செய்தியாளர் சந்திப்பில் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஆர்.கே.செல்வமணி.