கொரோனா வைரஸ் தாக்கம், தமிழகத்தில் கண்டறியப்பட்டதுமே, உடனடியாக மார்ச் மாத இறுதியில், சென்னை மற்றும் தமிழகத்தின் அணைத்து பகுதிகளிலும், மக்கள் ஒன்று கூடும் இடங்களான, திரையரங்கங்கள், கோவில்கள், மற்றும் வெள்ளித்திரை, சின்னத்திரை சார்ந்த பணிகள் முழுமையாக முடக்கப்பட்டது. 

இதனால் திரை துறையை நம்பி கூலி வேலை செய்து, தங்களுடைய பிழைப்பை நடத்தி வந்த, பல பெப்சி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இப்படி பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என, இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கேட்டு கொண்டதற்கு இணங்க, பல பிரபலங்கள் பெப்சி தொழிலாளர்களுக்கு அரிசியாகவும், மளிகை பொருட்களாகவும், பணமாகவும் கொடுத்து உதவினர்.

இந்நிலையில், தங்களுடைய சினிமா பணிகள் சிலவற்றில் தளர்வுகள் கொண்டுவர வேண்டும் என, இயக்குனரும், பெப்சி அமைப்பின் தலைவருமான ஆர்.கே.செல்வமணி, மற்றும் சின்னத்திரை சீரியல் பிரபலங்கள் மூலம் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று கொண்ட தமிழக அரசு, சின்னத்திரை சீரியல்களை 60 பேருடன் நடத்தலாம் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தெரிவித்தது.

அதே நேரத்தில், சமூக விலகல் கடைபிடிக்க வேண்டும்... உரிய அனுமதி பெற்றே சீரியல் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது போன்ற, நிபந்தனைகளும் கொடுக்கப்பட்டது. அதே நேரத்தில் இதுவரை வெள்ளித்திரை பட பிடிப்புகள் தமிழகத்தில் எப்போது துவங்கும் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாக வில்லை.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, கொரோனா ஊரடங்கு காரணமாக திரைத்துறையை சேர்ந்த தொழிலாளர்கள் 100 சதவீதம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். இது திரைத்துறைக்கே மிகவும் சோதனையான காலமாக அமைந்துள்ளதாக வேதனையோடு பேசினார். 

பாதிக்கப்பட்ட 18 ஆயிரம் தொழிலாளர்களுக்கு, இதுவரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து 4 முறை, உதவிகள் செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் 1500 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், வழங்க ஏற்பட்டு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த மாபெரும் உதவிக்கு உறுதுணையாக இருந்து வரும், நடிகர், நடிகைகள், தொழிலாளர்கள் என அனைவருக்கும் தன்னுடைய நன்றிகளை ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.