‘எல்.கே.ஜி.’ படம் தொடர்பாக வெளியான போஸ்டருக்கு அதிமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

ஆர்.ஜே.பாலாஜி - பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம். எல்.கே.ஜி. இந்தப் படத்தின் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இந்தப் போஸ்டர் 1980-ம் ஆண்டு மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் வெள்ளி செங்கோலுடன் போஸ் கொடுத்த புகைப்படம் போலவே இருந்தது. இதனால் இந்த போஸ்டர் அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அதிமுக தொழில்நுட்ப பிரிவு அணி ஆர்,ஜெ.பாலாஜிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

போஸ்டர் தொடர்பாக அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த பிரவீன் குமார் ட்விட்டரில் ‘எல்.கே.ஜி’ படம் ரிலீசானால் பாலாஜியின் கட் அவுட்டுக்கு செருப்பு அபிஷேகம் பண்ணப்போவதாக தெரிவித்தார். இந்த ட்வீட்டுக்கு பதில் அளித்துள்ள ஆர்.ஜே. பாலாஜி  ‘இதுவரைக்கும் பண்ணாத மாதிரி அண்டா அண்டாவாக செருப்பு அபிஷேகம் செய்யுங்கள்’ என்று பதில் அளித்துள்ளார்.

நடிகர் சிம்பு தனது கட் அவுட்டுக்கு அண்டா அண்டாவாக பால் அபிஷேகம் செய்யுங்கள் என்று பேசியதை மனதில் வைத்து ஆர்.ஜெ.பாலாஜி பதில் அளித்திருந்தார். இந்தப் பதிவும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஒருபுறம் அதிமுகவினரும் இன்னொரு புறம் சிம்பு ரசிகர்களும் சமூக ஊடங்களில் ஆர்.ஜெ. பாலாஜியை விமர்சித்து வருகிறார்கள்.