ஏ.ஆர். முருகதாஸ், ரஜினிகாந்த் கூட்டணியில் 4 நாட்களுக்கு முன்பு வெளியான தர்பார் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதும், ரசிகர்கள் இன்று வரை டிக்கெட் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். பட ரிலீசுக்கு முன்பே மலேசிய நிறுவனம் ஒன்று  தொடர்ந்த வழக்கால் சிக்கலில் சிக்கிய லைக்கா நிறுவனம், ஒருவழியாக அதிலிருந்து மீண்டும் சொன்ன தேதிக்கு "தர்பார்" படத்தை ரிலீஸ் செய்தது.  

தற்போது தியேட்டர்களில் தர்பார் திருவிழா களைகட்டி வரும் சமயத்தில் ஏ.ஆர்.முருகதாஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோர் மீது முன்னாள் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். தூத்துக்குடியைச் சேர்ந்த மரியம் மைக்கேல் என்பவர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காவல்துறையை தரக்குறைவாக சித்தரித்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

மேலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், போலீஸ் அதிகாரியாக வரும் ரஜினிகாந்த் அதிக தலைமுடி மற்றும் தாடியுடன் நடித்திருப்பது சீருடை பணியாளர்களை புண்படுத்தும் விதமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் "நான் கமிஷனர் அல்ல ரவுடி" என்று சூப்பர் ஸ்டார் பேசும் வசனமும் போலீஸ் மற்றும் ராணுவத்தை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். 

எனவே "தர்பார்" படத்தில் நடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்பு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் சிகிச்சை பெற்று வருபவர்களை காணச் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினியை பார்த்து இளைஞர் ஒருவர் "ஆமா..! நீங்க யாருங்க" என வெறுப்புடன் கேட்ட கேள்வி சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. இதனால் சூப்பர் ஸ்டார் செம்ம அப்செட் ஆனார். இப்ப மறுபடியும் அதே தூத்துக்குடி நீதிமன்றத்தில் தான் ரஜினி மேல வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடுங்கன்னு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கு. தூத்துக்குடின்னாலே தலைவருக்கு எப்பவும் பிரச்சனை தான்பா....!