தமிழ் ரசிகர்களையும் சினிமாவையும் எப்போதும் பிரித்து வைக்க முடியாது. பாரம்பரிய பண்டிகைகளை விட இவர்கள் விரும்பும் ஸ்டார்களின் படங்கள் ரிலீஸின் போதுதான் இவர்கள் பண்டிகையை போல உணருவார்கள்.

அப்படிப்பார்த்தால் தமிழகத்துக்கு இனி ஒவ்வொரு மாதமும் ஒரு பண்டிகைதான். ஆம் இனி ஒவ்வொரு மாதத்துக்கும் தமிழில் ஒரு ஸ்டார் நடிகரின் படம் ரிலீசாக வாய்ப்புள்ளது.

''ஜூலை - விஐபி 2''

வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றிக்குப்பின் அப்படத்தின் இரண்டாம் பாகம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மருமகன் தனுஷ் நடிக்க, இளைய மகள் சௌந்தர்யா ரஜினி இயக்கும் விஐபி 2 படப்பிடிப்பு முடிந்து.

வெளியீட்டுக்கு தேவையான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்படம்  ஜூலை 2வது வாரத்தில் வெளியாக இருக்கிறது.

ஆகஸ்ட் - விவேகம் ரிலீஸ் 

அஜித் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் விவேகம். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடந்து வருகின்றது. இப்படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளிவரவிருக்கின்றதாம், அடுத்தடுத்து விடுமுறை தினம் என்பதால் படத்திற்கு நல்ல வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

10ம் தேதியில் ஒரு செண்டிமெண்ட் உள்ளது கவணித்தீர்களா?, அது வேறு ஒன்றுமில்லை, அஜித்-சிவா கூட்டணியில் வெளிவந்த வீரம், விவேகம் இரண்டு படங்களுமே 10-ம் தேதி தான் வெளிவந்துள்ளது.

வீரம் ஜனவரி-10, வேதாளம் நவம்பர் 10 தற்போது விவேகம் ஆகஸ்ட் 10.  மேலும், இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட விவேகம் டீசர் மே-18 ம் தேதி வியாழக்கிழமை வெளியாகும் என நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

செப்டம்பர் -  தானா சேர்ந்த கூட்டம்

S3 படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் சூர்யா ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், செந்தில், மாஸ்டர் சிவஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படம் செப்டம்பர் இறுதியில் வெளியாகவுள்ளது.

அக்டோபர் - விஜய் 61(மூன்று முகம்)

தெறி படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி, விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் விஜய் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஜூன் 22-ம் தேதி விஜய் பிறந்தநாளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து பாடல்கள் ஆகஸ்ட் மாதமும் படம் அக்டோபரிலும் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் - ஸ்கெட்ச்

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம், 'ஸ்கெட்ச்'. தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். இது விக்ரமின் 53-வது படமாகும். ஒரு படத்துக்கு இரண்டு ஆண்டுகள் வரை செலவிடும் விக்ரம், இந்த முறை ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்துவருகிறார். தற்போது, கௌதம் மேனன் இயக்கத்தில், துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் டீசர் போஸ்டர்கள் ஏற்கெனவே வெளியாகி வைரலாகியது.

இந்த நிலையில், ஸ்கெட்ச் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் கடந்த சில நாள்களுக்கு முன் வெளியாகி இருந்தன. இதற்கிடையே இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை தற்போது, ரிலீஸ் செய்துள்ளனர். குறிப்பாக, 'துருவ நட்சத்திரம்' படத்துக்கு முன்பே அதாவது நவம்பர் மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

டிசம்பர் - விஸ்வரூபம் 2 

கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜாகுமார் உட்பட பலர் நடித்த படம், விஸ்வரூபம். பலத்த சர்ச்சைக்குள்ளான இந்தப் படம் ஹிட்டானது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கியிருந்தார் கமல். இந்தப் படத்தின் உரிமையை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் வாங்கியிருந்தார்.

ஆனால் கடந்த சில வருடங்களாக கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் அந்தப் படத்தை வரும் டிசம்பர் மாதம் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமே வெளியிடும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

ஜனவரி - 2.0

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. ஏற்கெனவே வெளியான ‘எந்திரன்’  படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் முடிந்துவிட்டது. தீபாவளிக்கு படம் ரிலீஸாகும் என்று ஏற்கெனவே அறிவித்தனர்.

இந்நிலையில், படம் தீபாவளிக்கு பதிலாக, அடுத்த வருடம் ஜனவரி மாதம் 25ம் தேதிக்குள் படம் ரிலீஸ் ஆகிவிடுமாம். ரோபோ பற்றிய இந்த கதையில், நிறைய வி.எஃப்.எக்ஸ். வேலைகள் இருக்கிறதாம். அந்த வேலைகளைத் திட்டமிட்டபடி முடிக்க முடியாமல் தாமதம்  ஆவதால், படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கின்றனர்.