நடிகர் ரவி மோகன் தயாரிக்க உள்ள புதிய படத்தில் எஸ்.ஜே சூர்யா இணைந்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய ரவி மோகன் 

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் ரவி மோகன் ஆரம்பம் முதலே வித்தியாசமான கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவர் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கணேஷ் பாபு இயக்கும் ‘கராத்தே பாபு’ படத்திலும், ‘ஜீனி’, ‘தனி ஒருவன்’ பாகம் 2 ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். படங்கள் நடிப்பது மட்டுமில்லாமல் ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி இருக்கிறார்.

படத்தின் பெயர் வெளியீடு

இந்த நிறுவனத்தின் மூலம் அவர் தனது முதல் படத்தை தயாரிக்க இருக்கிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ‘டிக்கிலோனா’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் யோகியின் இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் நடிக்கிறார். இந்த தகவலை இயக்குனர் கார்த்திக் யோகி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படத்திற்கு ‘ப்ரோ கோட்(Bro Code)’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் எஸ்.ஜே சூர்யா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக இயக்குனர் கார்த்திக் யோகி உறுதிப்படுத்தியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் மற்றும் அடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

‘ப்ரோ கோட்’ படத்தில் பணியாற்றும் கலைஞர்கள்

‘ப்ரோ கோட்’ படத்தை தயாரிப்பதன் மூலம் நடிகர் ரவி மோகன் தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். மேலும் இந்த படத்தில் நான்கு முன்னணி நடிகைகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘போர் தொழில்’ படத்தில் பணியாற்றிய கலைச்செல்வன் சிவாஜி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ‘அர்ஜுன் ரெட்டி’, ‘அனிமல்’ போன்ற படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் இசையமைக்க இருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ ராகவ் மேற்கொள்கிறார். கலை இயக்குனராக ராஜேஷ் பணியாற்றுகிறார்.

காமெடி ஜானரில் உருவாகும் ‘ப்ரோ கோட்’

இந்தப் படம் முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் கூடிய பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படமாக இருக்கும் என்று இயக்குனர் கூறியுள்ளார். படம் குறித்து இயக்குனர் கூறுகையில், “படத்தின் கதையை ரவி மோகனிடம் கூறிய போது அவர் மிகவும் ரசித்து கேட்டார். இந்த படத்தை தானே தயாரிக்க முன் வந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை கொடுக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

Scroll to load tweet…