திரைப்படத் துறையின் வேலை நேரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, தான் கூடுதல் நேரம் வேலை செய்தாலும், நடிகர்கள் உட்பட அனைவருக்கும் முறையான வேலை நேரம் வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Rashmika work hours controversy : திரைப்படத் துறையில் வேலை நேரம் தொடர்பாக ராஷ்மிகா மந்தனா கருத்து தெரிவித்துள்ளார். தான் கூடுதல் நேரம் வேலை செய்பவர் என்றாலும், நடிகர்களை அதிக நேரம் வேலை செய்ய வைக்க வேண்டாம் என்று ராஷ்மிகா வேண்டுகோள் விடுத்திருக்கிறார். சமீபத்தில், வேலை நேரம் தொடர்பாக தீபிகா படுகோன் தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார். எட்டு மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய முடியாது என்ற நிலைப்பாட்டால்தான் 'கல்கி' படத்திலிருந்து தீபிகா வெளியேறினார் என்று பெரிய விவாதங்கள் எழுந்தன. இந்த நிலையில், ராஷ்மிகாவும் அதுதொடர்பாக பேசி இருப்பது வைரலாகி வருகிறது.

ராஷ்மிகா கூறியதாவது : "நான் அதிகமாக வேலை செய்வேன். ஒரு சாதாரண மனிதன் செய்வதை விட அதிகமாக நான் வேலைகளை ஏற்றுக்கொள்கிறேன். ஒரு விஷயத்தைச் செய்ய முடியாது என்று என் குழுவினரிடம் சொல்பவள் நான் அல்ல. அவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதை நான் புரிந்து கொள்ளும்போது, 'லொகேஷன் இப்போதுதான் கிடைக்கும், குறைந்த நேரத்தில் இவ்வளவு படப்பிடிப்பு நடத்த வேண்டும்' என்றெல்லாம் அவர்கள் கூறும்போது, நான் அதைக் கேட்டு அவர்களுடன் நிற்பேன்," என்கிறார் ராஷ்மிகா.

'எங்களுக்கும் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும்' - ராஷ்மிகா

தொடர்ந்து பேசிய அவர் "இருப்பினும், நடிகர்களை அதிக நேரம் வேலை செய்ய வைக்க வேண்டாம் என்றுதான் நான் கூறுவேன். நடிகர்கள் மட்டுமல்ல, இயக்குநர்கள், லைட்மேன்கள், இசையமைப்பாளர்கள் என அனைவருக்கும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, அல்லது 5 மணி வரை எங்களுக்கு ஒரு நேரத்தை ஒதுக்குங்கள். ஏனென்றால் எங்களுக்கும் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும். தூங்க வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். இளம் வயதில் ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருந்திருக்கலாமே என்று நான் பின்னர் வருத்தப்படக் கூடாது," என்று குல்டே ப்ரோவிற்கு அளித்த பேட்டியில் ராஷ்மிகா பதிலளித்தார்.

முன்னதாக, தீபிகாவிற்கு ஆதரவாக கொங்கனா சென் ஷர்மாவும் குரல் கொடுத்திருந்தார். "சினிமா துறையில் சில விதிகள் வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நம்மால் 14-15 மணி நேரம் வேலை செய்ய முடியாது. நமக்கு 12 மணி நேர இடைவெளி இருக்க வேண்டும். வாரத்தில் ஒரு நாளாவது விடுமுறை கிடைக்க வேண்டும். குறிப்பாக தொழில்நுட்ப கலைஞர்களுக்கு. அது சமமாக இருக்க வேண்டும். ஆண் நடிகர்கள் தாமதமாக வந்து, தாமதமாக வேலை செய்து, பெண்கள் தங்கள் குழந்தைகளை விட்டுவிட்டு அதிக மணிநேரம் வேலை செய்யும் நிலை ஏற்படக்கூடாது," என்று கொங்கனா கூறியிருந்தார்.