ரங்கம்மா பாட்டியை அறியாதவர்கள் யாரும் தமிழ் சினிமாவில் இருக்கமுடியாது. எம்.ஜி. ஆர் காலம் தொடங்கி, அஜீத், விஜய் வரை அவர் நடிக்காத நடிகர்கள் படங்களே இல்லை என்னும் அளவுக்கு பிரபலம். என்ன பிரயோஜனம். படத்துக்கு 100, 200 என்று சம்பளம் வாங்கிய அவர் இன்று மெரினா பீச்சில் 5ரூபாய்க்கும், 10 ரூபாய்க்கும் கர்ச்சீப் விற்று வயிற்றைக் கழுவிக்கொண்டிருக்கிறார்.

 சமீப காலங்களில் ரங்கம்மா பாட்டி அதிகம் காணப்பட்டது வடிவேலுவுடன் காமெடிக்காட்சிகளில்.சென்னை வடபழனி குமரன்காலனியில் வசித்து வருகிறார். மூதாட்டியான இவரது காமெடி ரசிக்கும்படி இருக்கும். குறிப்பாக ஒரு திரைப் படத்தில் வடிவேலுவை, ‘போற வழியிலேயே அப்படியே இந்த நாயை ‘சூ’ வென விரட்டிட்டு போ’, என்று இவர் பேசிய வசனம் பிரபலமானது. அன்று முதல் ‘சூ பாட்டி’ என்ற அடையாளம் இவருக்கு கிடைத்தது.

ரசிகர்களின் கவலைகளுக்கு நகைச்சுவையை மருந்தாக அளித்த அந்த பாட்டி, இன்று பட வாய்ப்புகள் இல்லாமல் வறுமையில் வாடுகிறார். தவமிருந்து 9 பிள்ளைகள் பெற்றிருந்தும், வயிற்று பிழைப்புக்காக சென்னை மெரினா கடற்கரையில் கர்சீப் விற்று காலத்தை போக்கி வருகிறார். கடற்கரைக்கு வருவோர் இவரை அடையாளம் கண்டுகொண்டு அவருடன் ‘செல்பி’ எடுத்து செல்கின்றனர். உற்சாகமாக போஸ் கொடுக்கும் ரங்கம்மாள், தன்னிடம் ஏதாவது பொருள் வாங்கி செல்லுமாறும் வேண்டுகோள் வைக்கிறார்.

’நான் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறேன். பல நடிகைகளுக்கு ‘டூப்’ ஆகவும் நடித்திருக்கிறேன். தமிழ் தவிர மலையாளம், இந்தி படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறேன்.

500 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் கிடைத்த வருமானம் மிகவும் சொற்பம்தான். அதையும் நான்  எனது பிள்ளைகளுக்கே செலவழித்து விட்டேன். தள்ளாத வயதில் நான் நடிக்க தயாராக இருந்தாலும் சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பெற்ற பிள்ளைகளும் கைவிட்ட நிலையில், சாப்பாட்டுக்கே வழியின்றி கஷ்டப்படுகிறேன்.

எனவே சில மாதங்களாக இங்கே வந்து வயிற்றுப் பிழைப்புக்காக கர்சீப் விற்க ஆரம்பித்துவிட்டேன். ஆனால் இதில் பெரிய வருமானமில்லை. கால்வயிறு அரைவயிறுமாய்தான் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்’ என்கிறார் ரங்கம்மா பாட்டி.

கோடி கோடியாய் சம்பளம் வாங்கி ஈ.சி.ஆர். ஏ.சி. பங்களாக்களில் வசித்துவரும் ஒரே ஒரு நடிகரின் காதுக்காவது இந்த செய்தி செல்கிறதா என்று பார்க்கவேண்டும்.